வீரர்களின் பெயரால் வாக்கு சேகரிக்கும் மோடிக்கு வெட்கமில்லை : ராஜ் தாக்கரே

சோலாபூர்

ராணுவ வீரர்கணின் பெயரால் வாக்கு சேகரிக்கும் மோடியை வெட்கம் இல்லாதவர் என ராஜ் தாக்கரே தாக்கி உள்ளார்.

மகாராஷ்டிர நவ நிர்மாண் சமிதி கட்சி மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே பாஜகவுக்கு எதிரான காங்கிரஸ் கூட்டணிக்கு பிரசாரம் செய்து வருகிறார். அக்கூட்டணியின் பல தேர்தல் பேரணிகளில் ராஜ் தாக்கரே கலந்துக் கொள்கிறார். அவ்வகையில் சோலாப்பூர் மாவட்டதில் நடந்த ஒரு தேர்தல் பேரணியில் கலந்துக் கொண்டு அவர் உரையாற்றினார்.

அந்த பேரணியில் ராஜ் தாக்கரே, “நான் உங்களை எழுப்பி பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் அக்கிரமங்களுக்கு எதிராக போராட வைக்க உள்ளேன். அவர்கள் இருவரும் பரப்பி வரும் பொய்களால் நாடெங்கும் இன வேறுபாடு அதிகரித்துள்ளது. விரைவில் அவர்கள் இருவரும் அரசியல் உலகை விட்டு அடியோடு மறைந்து போக நீங்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்

மோடி மற்றும் ஷா ஆகியோருக்கு இங்கு ஒரு கட்சி கூட்டணி மூலம் உதவி வருகிறது. அவர்களையும் நீங்கள் விட்டு வைக்கக் கூடாது. மோடி மற்றும் ஷாவை அதிகார வட்டத்துக்குள் வைத்திருக்க உதவும் அந்த கட்சிக்கும் நீங்கள் வாக்களிக்கக் கூடாது.

மோடி புல்வாமா தாக்குதல், பாலகோட் தாக்குதல் என ராணுவ வீரரகளின் பெயாரால் வாக்கு சேகரித்து வருகிறார். ஆனால் மோடி வீரர்களின் தியாகத்தை அங்கீகரிக்காமல் உள்ளார். இவ்வாறு ராணுவ வீரர்களின் பெயரால் வாக்கு கேட்கும் மோடிக்கு வெட்கம் இல்லை அவர் ஒரு வெட்கம் கெட்டவர்” என பேசி உள்ளார்.

ராஜ் தாக்கரே இதற்கு முன்பு சிவசேனாவில் இருந்தவர் என்பதால் பெயரை குறிப்பிடாமல் தனது உரையில் அக்கட்சியை தாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.