மும்பை: மராட்டிய மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், தனது தொண்டர்களை எதிர்வரும் சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் மகாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே.

இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத அவரின் கட்சி, பாரதீய ஜனதாவை எதிர்த்து மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்தது. அதேசமயம், காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் ஆதரவளித்தது அக்கட்சி.

இந்நிலையில், விரைவில் நடக்கவுள்ள மராட்டிய சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகும்படி தனது தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளது அக்கட்சித் தலைமை. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும், அதுகுறித்து கவலைப்படாமல், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அக்கட்சிக்கு 13 சட்டசபை உறுப்பினர்கள் கிடைத்தார்கள். ஆனால், 2014ம் ஆண்டு தேர்தலில், வெறும் 1 உறுப்பினர் மட்டுமே கிடைத்தார். அவரும் பின்னர் சிவசேனாவில் இணைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.