தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு முதன் முதலில் தெய்வத்தமிழில் பூஜைகளும், பேராபிஷேகமும் நடைபெற்றது.

தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளான ஐப்பசி சதய நட்சத்திரமான இன்று 1035வது சதய விழா கொண்டாடப்பட்டது. பெரிய கோயிலில் மங்கள இசையுடன் இந்த சதய விழா தொடங்கியது.
கோயில் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்ட பின்னர், சிறப்பு பூஜைகள் செய்த ஓதுவார்கள், ஊர்வலமாக வந்து நந்தி மண்டபம் அருகே அமர்ந்து தமிழில் பாராயணம் பாடினர்.
அதை தொடர்ந்து, தருமபுரி ஆதினம் கட்டளை சொக்கலிங்க தம்பிரான் தலைமையில் பெருவுடையாருக்கு மூலிகை, பால், மஞ்சள், சந்தனம், திரவிய பொடி, கரும்புச்சாறு, விபூதி, தயிர் மற்றும் பழங்கள் என 48 மங்கல பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சதய விழாவை முன்னிட்டு, ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் தஞ்சை ஆட்சியர் கோவிந்த ராவ், மாவட்ட எஸ்பி தேஷ்முக் சேகர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஒரு நாள் நிகழ்வுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டு இருந்தது.
அதன் காரணமாக, கோயிலில் பக்தர்களின் எண்ணிக்கையும் குறைந்த அளவாகவே காணப்பட்டது. சதய விழா காரணமாக, தஞ்சை நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.