மதுரை:

மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளை திருடி விற்பனை செய்யும் சம்பவம் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தை திருட்டில் பெண்கள் அதிகள் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது. இவர்கள் உறவினர்களை போல் மருத்துவமனையில் பிரசவ வார்டுக்குள் சென்று குழந்தைகளை திருடிக் கொண்டு சென்றுவிடுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதை கட்டுப்படுத்த பிரசவ வார்டுகள், குழந்தைகள் சிகிச்சை பிரிவு, மருத்துவமனை வளாகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்த கட்டமாக கூடுதல் கேமராக்கள் பொருத்துவதை தவிர்த்து லேசர் கருவிகை மருத்துவமனையில் இருந்து வெளியேறும் இடத்தில் நிறுவ முடிவு செய்யப்பட் டுள்ளது.

குழந்தையின் கையில் சங்கேத எண்கள் அடங்கிய மின்னணு அட்டை கட்டிவிடப்படும். இதேபோல் இந்த சங்கேத எண்கள் அடங்கிய அட்டை பெற்றோர், மருத்துவமனை பணியாளர்கள், டாக்டர்கள், நர்சுகளுக்கு வழங்கப்படும். இந்த அட்டை இல்லாத நபர்கள் குழந்தைகளை மருத்துவமனையில் இருந்து தூக்கிக் கொண்டு வெளியே சென்றால் வாசலில் பொருத்தப்பட்டிருக்கும் லேசர் கருவி எச்சரிக்கை மணி ஒலித்து காட்டிக் கொடுத்துவிடும்.

தமிழகத்தில் முதன்முறையாக இந்த திட்டம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமல்படுத்தப்ப டுகிறது. ‘‘குழந்தை திருட்டை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்று இந்த மருத்துவமனையின் மருத்துவர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார். இந்த திட்டம் படிப்படியாக இதர அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.