சொந்த வீடும் பிரம்மாண்டம்.. அசத்தும் ராஜமவுலி..

பாகுபலி திரைப்பட புகழ் இயக்குநர் ராஜமௌலி எப்போதும் பிரம்மாண்டத்தை பெரிதும் விரும்புபவர். அது அவரின் படங்களில் முழுவதுமாக எதிரொலிக்கும். அப்படிப்பட்ட ரசனைக்காரர் கட்டும் வீடு எப்படி இருக்கும் என்று சொல்லவா வேண்டும்.

இதற்கென ராஜமௌலி தற்போது 100 ஏக்கர் பரப்பளவில் இடம் வாங்கி பிரம்மாண்ட பங்களாவையும் கட்டி வருகிறார். ஹைதராபாத்தில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நல்ஹொண்டா அருகே உள்ள கட்டங்கூர் கிராமத்தில் இந்த பண்ணை வீட்டை கட்டி வருகிறார் இவர். தேசிய விருது பெற்ற ஆர்ட் டைரக்டர் ரவிந்தர் ரெட்டி இந்த வீட்டை வடிவமைத்து கொடுத்து கட்டடப்பணிகளை மேற்பாட்வையிட்டு வருகிறார். வீட்டைச் சுற்றி மாமரங்கள், எலுமிச்சை, தென்னை மரங்களுடன் கூடிய தோட்டத்தை இயற்கை உரங்களை கொண்டு வளர்க்கத் திட்டமிட்டுள்ளனர்.

ராஜமௌலி தனது குடும்பத்தை மிகவும் நேசிப்பவர். அவர் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதை மிகவும் விரும்புவர். ஆகையால் இந்த பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடும் வகையில் பல்வேறு வசதிகளும் இங்கு செய்து வருகிறார். எட்டு பிரம்மாண்ட அறைகளுடன் கட்டப்படும் இந்த வீட்டில் ராஜமவுலிக்கு விருப்பமான ப்ரவுன், மெரூன் மற்றும் பச்சை நிறக் கலர் பெயிண்டிங் பூசப்பட உள்ளது. தேக்கு மர பலகைகளும் விலையுயர்ந்த கற்களும் பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கிரிக்கெட் மைதானம், வாலிபால், பேஸ்கட் பால் கோர்ட் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் மினி தியேட்டர் ஒன்றையும் அமைக்க இருக்கிறார்களாம்.

இவைகளுடன் ஒன்றரைக்கோடி மதிப்பிலான பி.எம்.டபிள்யூ-7 சீரீஸ் ஆடம்பரக்காரை வாங்கியிருக்கிறார் ராஜமவுலி. திரையில் பிரம்மாண்டங்களை காட்டி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய ராஜமௌலியிடம் நிஜ வாழ்க்கையிலும் அதைத்தானே எதிர்பார்க்க முடியும்.

– லெட்சுமி பிரியா