ராஜபக்சே நாளை ராஜினாமா : ராஜபக்சே மகன் அறிவிப்பு

கொழும்பு

ராஜபக்சே நாளை பதவி விலக உள்ளதாக அவர் மகன் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

                                          மகனுடன் ராஜபக்சே

இலங்கையில் தற்போது அரசியலில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் சிறிசேனா பதவி நீக்கம் செய்தார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக சிறிசேனா நியமித்தார். இதை எதிர்த்து பெரும்பான்மையை நிரூபிக்க ரணில் முயன்றதால் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு செல்லாது என இலங்கை உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கபட்டது. அதை ஒட்டி நடந்த பெரும்பான்மை வாக்குப் பதிவுகளில் தொடர்ந்து ரணில் விக்ரம சிங்கே வெற்றி பெற்று பெரும்பான்மையை நிரூபித்தார். அப்படி இருந்தும் ராஜ பக்சே தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து விலகாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தனது டிவிட்டரில், “பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகுகிறார்” என பதிந்துள்ளார். மேலும் நமல், “நாட்டின் நிலைத்தன்மையைக் காக்க ராஜபக்சே பதவி விலகுகிறார். நாளை தனது பதவி விலகல்குறித்து பொதுமக்களுக்கு விளக்கிய பின் ராஜினாமா செய்ய உள்ளார்” எனவும் தெரிவித்துள்ளார்.