அகமதாபாத்:

குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து விலைமதிப்பற்ற ராஜராஜ சோழன் சிலை மீட்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோனவை. மீட்கப்பட்ட சிலைகள் ஓரிரு நாளில் சென்னை வந்தடையும் என்று  ஐ.ஜி. பொன்மாணிக்க வேல்  கூறி உள்ளார்.

தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து ஏராளமான சிலைகள் திருட்டு போனதை தொடர்ந்து, சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுபடி ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்பு பிரிவு குழுவினர் திருடப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு வருகின்றனர்.

ஏற்கனவே  பழனி கோவில் சிலை விவகாரம், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சிலை விவகாரம் போன்றவை வீதிக்கு வந்த நிலையில், பல கோவில்களிக்கு சென்று சிலைகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், 60 வருடங்களுக்கு முன்பு திருட்டுப்போன தஞ்சை பெரிய கோயிலில் இருந்து ரூ.150 கோடி மதிப்பிலான ராஜராஜசோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள்  திருடு போன நிலையில், அந்த சிலைகள் குஜராத் மியூசியத்தில் இருப்பது தெரிய வந்தது.

இந்த சிலைகளின் மதிப்பு பல கோடிகளை தாண்டும்.  ஐஜி பொன்மானிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீஸ் குஜராத் சென்று சிலையை மீட்டுள்ளது.  மீட்கப்பட்ட அந்த சிலைகள் அனைத்தும்  ரயில் மூலம் நாளை சென்னை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சிலைகள் அனைத்தும் 1000 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.