ராஜராஜ சோழன் குறித்து அவதூறு: முன்ஜாமின் கோரி பா.ரஞ்சித் மனு

மதுரை:

ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியதாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதியப் பட்டுள்ள நிலையில், தனக்கு  முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனர் தலைவர் உமர்பாரூக்கின் நினைவு நாள் பொதுக்கூட்டம் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித், இந்துக்கள், தமிழர்கள், ராஜராஜசோழன் பற்றி பேசினார்.

அப்போது,  பேரரசர் ராஜராஜசோழன் ஆட்சி காலத்தில் ஜாதி ஒடுக்குமுறை இருந்ததாகவும், அவரது ஆட்சி காலம் இருண்ட காலம் என்பதாகவும், பேசியிருந்தார். தலித்துகள் நிலங்களை ராஜராஜசோழன் பறித்ததாகவும் கூறினார்.

இந்த பேச்சுக்கு திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களிடமிருந்தும் கூட கண்டனங்கள் எழுந்துள்ளன, சமூக வலைத்தளங்களிலும் ரஞ்சித்துக்கு கடும் கண்டனங்களை எழுந்துள்ளது.

இந்த நிலையில்,  ராஜராஜ சோழனை அவதூறாக பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது திருப்பனந்தாள் காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர், தானாக முன்வந்து வழக்குப்பபதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும்,  வன்முறை தூண்டும் விதமாக பா.ரஞ்சித் பேசியுள்ளார் என திருவிடைமருதூர் டிஎஸ்பியிடம் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின்பேரில் பா.ரஞ்சித் மீது கலகம் செய்வது, தூண்டி விட்டு கலகம் ஏற்படுத்துவது, மதம், இனம், மொழி சாதி, சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளை தூண்டிவிட முயற்சி செய்வது என (153, 153(ஏ) ஆகிய பிரிவின்கீழ் திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், ராஜராஜ சோழன் குறித்து, தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் முன்ஜாமின் கோரி மதுரை உயர்நீதி மன்ற கிளையில் பா.ரஞ்சித் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.