சென்னை:

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின், பெரியார் சிலை உடைத்து அகற்றப்படும் என கருத்துக்கு நடிகர் ரஜினி காந்தும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று ராஜா  கூறியது காட்டுமிராண்டித்தனம் என்று 3 நாட்களுக்கு பிறகு இன்று  நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

திரிபுராவில் பாஜக ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து அங்குள்ள லெனின் சிலையை பாஜகவினர் அகற்றினர். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட ராஜா, ” லெனின் யார் அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபூராவில் இன்று திரிபுராவில் லெனின் சிலை நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை ”  என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக அமைப்புகள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தமிழகம் முழுவதும் போராட்டமும் நடைபெற்றது.

ஆனால், நடிகர் ரஜினிகாந்திடம் இருந்து எந்தவித கருத்தும் வெளிவரவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதற்கிடையில்  தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக எச். ராஜா கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று  அவரை சந்தித்த செய்தியாளர்கள் ராஜாவின் பதிவு குறித்து கருத்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர்,  பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று ராஜா  கூறியது காட்டுமிராண்டித்தனம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.