நீலகிரியில் ராசாவின் வெற்றி உறுதி: அதிமுக தலைமை மீது தொண்டர்கள் கொந்தளிப்பு

கோவை:

நீலகிரி லோக்சபா தொகுதி வேட்பாளராக அந்த தொகுதிக்கு அறிமுகமில்லாத வேட்பாளரை அதிமுக தலைமை நிறுத்தி உள்ளதால், திமுக வேட்பாளரான் ராசாவின் வெற்றிக்கு அதிமுக தலைமை சப்போர்ட் செய்து வருவதாக நீலகிரி மாவட்ட அதிமுக தொண்டர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என தேதிகள் அறிவிக்கப் பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. தமிழகத்தில் 2வது கட்ட தேர்தல்  தேதி அறிவிக்கப்பட்டுள்ள  ஏப்ரல் 18ந்தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதையடுத்து தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து அறிவித்து வருகின்றனர்.

நீலகிரி தொகுதியில் திமுக சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அறிவிக்கப்பட்டு உள்ளார்.  அவரை எதிர்த்து அதிமுக சார்பில், அவினாசியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.  தியாக ராஜன் நிறுத்தப்பட்டு உள்ளார். அதேவேளையில் இவர்களுக்கு சவால் விடும் வகையில், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமசாமி போட்டியிடுகிறார். இதன் காரணமாக மும்முனை போட்டி நிலவி வருகிறது.

நீலகிரி தொகுதி 1980ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை காங்கிரசின் ஆதிக்கத்தின் இருந்து வந்தது. பின்னர் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக, 1998ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அங்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மாஸ்டர் மதன் வெற்றி பெற்றார். பின்னர் 2004ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றது.

அதன்பின்னர் 2009ம் ஆண்டு நடைபெற்ற 15வது மக்களவை தேர்தலின்போது நீலகிரி தொகுதி, கூட்டணி கட்சியான திமுகவுக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுத்தது. ராசாவும் அமோகமாக வெற்றி பெற்று மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார்.

பின்னர் 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, ராசாவை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இந்த தேர்தலின்போது, திமுக, காங்கிரஸ், மதிமுக, தேமுதிக என அனைத்து கட்சிகளும் தனித்தனியாக களத்தில் நின்றதால் திமுகவின் வெற்றி வாய்ப்பு நழுவியது.

அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணன் 4,63,700 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் ஆ.ராசா 3,58,760 வாக்குகள் பெற்றார். எனவே அந்த தொகுதியில் 1,04,940 வாக்குகள் வித்தியாசத் தில் அதிமுக வெற்றி பெற்றது. இந்த தொகுதியில் 49,553 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி இருந்தது.

இந்த நிலையில், தற்போது ராசா மீண்டும் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக களமிறங்கி உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட தற்போதையஎம்.பி. கோபாலகிருஷ்ணன் உள்படட 20-க்கும் மேற்பட்டோர் முயற்சி செய்த நிலையில்,   அவினாசியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. தியாகராஜன் என்பவருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இது நீலகிரி மாவட்ட அதிமுகவினரிடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக தொண்டர்களுக்கு பரிச்சயமே இல்லாத தியாகராஜனை வேண்டுமென்றே அதிமுக தலைமை நிறுத்தி உள்ளதாக குமுறி வருகின்றனர்.

ஏற்கனவே அதிமுகவின் வாக்குகளை டிடிவி கட்சியினர் பிரித்து வரும் நிலையில், தற்போது  கோவை அவிநாசியை சேர்ந்தவரை  நீலகிரி தொகுதி வேட்பாளராக நிறுத்தி இருப்பது அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி (தனி) தொகுதியில் இம்முறை தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க. ஆகியவை களம் காண்கின்றன. இதனால் நீலகிாியில் மும்முனை போட்டி உருவாகியுள்ளது.

அறிமுகமில்லாத வேட்பாளரை அ.தி.மு.க. நிறுத்தியுள்ளதால், தி.மு.க., வேட்பாளர் ராசாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், இதற்கு அதிமுக தலைமை மறைமுகமாக உதவி செய்திருப்பதாகவும்  ஆளுங்கட்சியினர் புலம்பி வருகின்றனர். அதிமுகவின் வாக்குகளை டிடிவி தரப்பினர் ஆசை வார்த்தைகளை கூறி பிரித்து வரும் வேளையில், அதிமுக தலைமை இது போன்று வேட்பாளர்களை அறிவித்து இருப்பது, திமுக வெற்றிக்கு  அதிமுக மறைமுகமாக உதவி வருவதாகவும்,  ஈபிஎஸ் ,ஓபிஎஸ்-ஐ ஜெயலலிதா ஆன்மா கூட மன்னிக்காது என்று கொந்தளித்து வருகின்றனர்.