ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டது.

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவவை தேர்தலை ஒட்டி காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அடுத்த மாதம் 7 ஆம் தேதி அன்று ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக அணிகளிடையே நேரடி போட்டி உள்ளது. இரு அணியினரும் தற்போது பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபடுள்ளனர். இதைத் தவிர மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் தேர்தல் களத்தில் உள்ளது.

இந்த தேர்தலை ஒட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று கட்சியின் ராஜஸ்தான் மாநில தேர்தல் பொறுப்பாளரான ஹரிஷ் சவுத்ரி வெளியிட்டுள்ளார். இந்த தேர்தல் அறிக்கை குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் பேசுகையில், “இந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களில் ஒன்று பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்பதாகும்.

மற்றொரு முக்கிய அம்சம் விவசாயக் கடன் தள்ளுபடியாகும். அது மட்டுமின்றி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமுதாயத்தின் அனைத்து மக்களுக்கும் நல்லது செய்ய திட்டமிட்டுள்ளோம். இது குறித்து நாங்கள் சமூக தளங்களில் மக்கள் கருத்தை அறிந்து அதன்படி செயல் பட தீர்மானித்துள்ளோம். மொத்தத்தில் இது ஒரு அறிக்கை அல்ல. நாங்கள் செய்ய வேண்டிய வேலைகளின் ஆவணம்” என குறிப்பிட்டுள்ளார்.

கடன் தள்ளுபடி மட்டுமின்றி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க உள்ளதாக காங்கிரஸ் அறிக்கையில் கூறி உள்ளது. அத்துடன் விவசாயத்துக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் ஜி எஸ் டி வரம்பில் இருந்து நீக்க உள்ளதாகவும் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.