சுற்றுலாத் தளங்களை ஜுன் 1 முதல் திறக்கும் ராஜஸ்தான்!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அரசால் நிர்வகிக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள், ஜுன் 1ம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்துவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கட்டுப்பாட்டுப் பகுதிகள் மற்றும் ஊரடங்குப் பகுதிகளில் அமைந்திருக்கும் வரலாற்று சின்னங்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.

பிரச்சினையில்லாத பிற இடங்களில் அமைந்த வரலாற்று சின்னங்கள், முதல் இரண்டு வாரங்களுக்கு செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய 4 நாட்கள் திறக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் வாரத்தில், இந்த வரலாற்று சின்னங்கள், காலை 9 முதல் மதியம் 2 மணி வரையும், இரண்டாவது வாரத்தில், காலை 9 முதல் மதியம் 1 மணிவரை மற்றும் மதியம் 3 முதல் மாலை 5 வரை திறந்திருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம், மூன்றாவது வாரத்திலிருந்து இந்த நினைவுச்சின்னங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு அன்றாடம் திறந்துவிடப்படும். ராஜஸ்தானில் சுற்றுலா நடவடிக்கைகளை மீண்டும் துவங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.