ஆயிரம் நோயாளிகளை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவரின் அசராத உழைப்பு..

ஆயிரம் நோயாளிகளை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவரின் அசராத உழைப்பு..

“நான் இந்த ஆம்புலன்ஸ்லயே தான் தூங்குறேன்.  தெருக்குழாய்ல தான் குளிக்கிறேன்.  நான் வேலை செய்ற டிஸ்ட்ரிக்ட் ஹாஸ்பிடல்ல அவங்களே நான் சாப்பிடுதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணி குடுத்திடறாங்க.  இந்த கொரோனா நார்மல் ஆனா தான் நான் என் வீட்டுக்கு போறதா முடிவு பண்ணிட்டேன்.  அதுவரை இந்த ஆம்புலன்ஸ் தான் என் வீடு” என்கிறார் பாபு பாரதி.

உத்திர பிரதேசம் சாம்பல் மாவட்ட மருத்துவமனையில் ஒப்பந்த ஓட்டுநராக ரூ. 17,000/- சம்பளத்தில் பணியிலிருக்கும் இந்த 65 வயது முதியவர் வீட்டிற்குச் சென்று 42 நாட்களாகின்றன.  இவரது மனைவி இஃபதார் நோம்புக்கென எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை.  இவரது மூன்று குழந்தைகளுக்கும் ரம்ஜானுக்கு புது துணிகள் எதுவும் இன்னமும் வாங்கவில்லை.

“தினமும் காலைல வீட்டுக்கு போன் பண்ணி பேசிடுவேன்.  நான் நல்ல உடல் ஆரோக்யத்தோட இருக்கிறதை முதல்ல தெரியப்படுத்திடுவேன்.  இங்க தொடர்ந்து ஆம்புலன்ஸ் தேவை இருக்கிறதால இப்போதைக்கு நான் வீட்டுக்கு போறதா ஐடியாவே இல்ல.  பரிசோதனைக்கு அவங்கள கூட்டிட்டு வரது தான் என் முக்கிய நோக்கமே” என்கிறார் திடமாக.

சம்பல் மாவட்ட மருத்துவமனை இன்-சார்ஜ் டாக்டர் நீரஜ் சர்மா, “இந்த நோய் தொற்று தொடங்கியதிலிருந்து பாரதி எங்க டீமோட முக்கிய அங்கமா இருந்து வராரு.  இதுவரை இங்க 1100 பேர் கோவிட் 19 பரிசோதனைக்காக வந்திருக்காங்க.  அதுல  பாரதி மட்டுமே 700 பேர் வரை அழைச்சிட்டு வந்திருக்காரு.  இவரோட சேவை ஈடு இணையற்றது.  இரவு பகல்னு எந்த நேரமும் ஆம்புலன்ஸ்லயே தயாரா இருப்பாரு அழைப்புக்காக.  அந்தளவு டெடிகேஷன்” என்கிறார் பாபு பாரதி பற்றி பெருமையாக.

மேலும் “நாங்களும் எத்தனையோ தடவை வீட்டுக்கு போயிட்டு வாங்கனு சொல்லிட்டோம்.  ஆனா இந்த பகுதி பச்சை மண்டலமாக அறிவிக்கப்படும் வரை ஆம்புலன்ஸ் தான் தனது வீடுனு பிடிவாதமா மறுத்துட்டாரு” என்று ஆச்சரியம் தெரிவிக்கிறார் இவர்.

“கொரோனா வயசானவங்கள ஈசியா தாக்கிடுதுனு எனக்கும் தெரியும்.  எனக்கு 65 வயசாகுறதால, ரொம்ப ரொம்ப கவனமா இருக்கேன்.  தேவையான எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விடாம பின்பற்றிட்டு வரேன்.  ஒவ்வொரு முறை நோயாளிகளை இறக்கிவிட்ட உடனே வண்டியை முழுவதுமாக சேனிடைசர் வெச்சு சுத்தம் செஞ்சிடுவேன்” என்று மிக தெளிவுடன் கூறும் இவருக்கு இவ்வருட ரம்ஜான் மிக வித்தியாசமான ஒன்றாக அமைந்துள்ளது.

ஆரஞ்சு மண்டலமாக உள்ள சம்பல், விரைவில் பச்சை மண்டலமாக மாறி இவர் விரைவில் வீடு திரும்ப இறைவன் அருளட்டும்.

– லெட்சுமி பிரியா