ஜெய்ப்பூர்:

இரவு 8 மணிக்குப் பிறகு மதுபானங்கள் விற்றால் நடவடிக்கை எடுக்குமாறு, கலால் துறை அதிகாரிகளுக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.


இது குறித்து அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு முதல்வர் அசோக் கெலாட் கூறியதாவது:

கடந்த 2008-ம் ஆண்டு இரவு 8 மணிக்குப் பிறகு மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டோம். அப்போது சமுதாயத்தில் நல்ல மாற்றங்கள் தெரிந்தது.

பெரும்பாலான கடைக்காரர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட மிக அதிக விலைக்கு மதுபான பாட்டில்களை விற்பது குறித்த புகார் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக கடத்துவதை தடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்குப் பிறகு மதுபானங்களை விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதிப்பது, உரிமத்தை ரத்து செய்வது, சீல் வைப்பது போன்ற கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, கலால் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

கடந்த 1992- 2012-ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் 55 சதவீதத்துக்கும் அதிகமானோர் மதுப் பழக்கத்துக்கு அடிமையானதாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.