ராஜஸ்தான் 74%: தெலங்கானா 67% வாக்குப்பதிவு: ஆட்சியை பிடிக்கப்போவது யா?

டில்லி:

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான், தெலுங்கானா  மாநில  சட்டமன்ற தேர்தலில் வாக்குப் பதிவு விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி ராஜஸ்தானில் 74 சதவிகித வாக்குப்பதி வும், தெலுங்கானா மாநிலத்தில் 67 சதவிகித வாக்குப்பதிவும் நடைபெற்றுள்ளது.

நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப் பதிவு பின்னர் மந்தமாகவே நடைபெற்று வந்தது. காலை  காலை 9 மணி நிலவரப்படி ராஜஸ்தானில்  6.11 சதவிகிதம் வாக்குப்பதிவும், தெலுங்கானா வில் 8.97% சதவிகிதம் வாக்குப்பதிவும் நடைபெற்று வந்த நிலையில், மதியம் 1 மணி அளவில் 45 சதவிகிதம் அளவிலேயே வாக்குகள் பதிவாகி இருந்தன.  தொடர்ந்து பிற்பகல்   வாக்குகள் பதிவு சற்று அதிகரித்த நிலையில் இறுதியில்  ராஜஸ்தான் மாநிலத்தில் 74 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது. அதுபோல தெலுங்கானாவில் 67 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில்199 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கு 2,274 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 4.74 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். அவர்களுக்காக  51,687 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 259 வாக்குச்சாவடிகளில் முழுக்க முழுக்க பெண் ஊழியர்கள் மட்டுமே பணியாற்றினர்.

காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி  மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், சுமார் 73.85 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில இடங்களில் வன்முறை வெடித்து. அல்வரில், பிகானீரின் கோலயாத் பகுதியில் வாக்குச்சாவடி பகுதிகளில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

ஜல்ராபதான் தொகுதியில் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா வாக்களித்தார். அதே போல், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், ஜெய்ப்பூரில் வாக்களித்தார்.

119 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2.80 கோடியாகும்.  இவர்களுக்காக 32,815 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டிருந்தன. நக்சல்கள் மிரட்டல் காரணமாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காவல்துறையினர், துணை ராணுவத்தினர் என சுமார் 1 லட்சம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் ஒரு திருநங்கை உள்பட 1,821 வேட்பாளர் கள் களத்தில் உள்ளனர். ஆளும் டிஆர்எஸ் கட்சி, பாஜக ஆகிய கட்சிகள் தனித்தும், காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலங்கானா ஜனசமிதி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டணியாகவும் களத்தில் உள்ளன.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம், வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டு சுமார் 10 நிமிடம் அளவில் வாக்குகள் பதிவு தடைபட்டது. அங்கு   67 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும், முதல்வருமான  சந்திரசேகர் ராவ், ஐதராபாதில் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். இதேபோல், தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

நடிகரும் அரசியல்வாதியுமான சிரஞ்சீவி, நடிகர் நாகார்ஜுனா, பாகுபலி திரைப்பட இயக்குநர் ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர் மற்றும் பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் உள்ளிட்டோர் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

இத்துடன் 5 மாநில சட்ட மன்ற தேர்தல் வாக்குப்பதிவுகள் நிறைவு பெற்றுள்ளன. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் ஏற்கனவே வாக்குப்பதிவு  முடிவடைந்த நிலையில், நேற்று தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடைந்து உள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக கருதப் படும இந்த 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11ந்தேதி  நடைபெறுகிறது. இது தேசிய அரசியல் கட்சிகளின் எதிர்கால வாழ்வை நிர்ணயிக்குப் போகிறது…