டெல்லி:
ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் காரணமாக அங்கு காங்கிரஸ் தலைமை யிலான மாநில அரசின் ஆட்சிக்கு சிக்கல் நீடித்து வருகிறது. முதல்வருக்கு எதிராக துணை முதல்வர் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், அரசு  பெரும்பான்மை இழந்து வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று  ஆட்சியமைத்தது.  15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியது.
200 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட அவையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 101 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும், 2018 சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு  112 இடங்கள் கிடைத்த நிலையில் ஆட்சி அமைத்தது. அங்கு முதல்வர் பதவியை பிடிக்க மூத்த தலைவர் அசோக் கெலாட்டுக்கும், இளந்தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், ராகுல்காந்தி தலையிட்டு, சச்சினை அமைதிப்படுத்தி, அவருக்கு துணைமுதல்வர் பதவி வாங்கிக் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்தே அங்கு அட்சி அமைக்கப்பட்டது. இருந்தாலும் இரு தலைவர்களுக்கும் இடையே முட்டல் மோதல் நீடித்து வந்தது. தற்போது இந்த மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது. இதற்கு பின்புலமாக பாஜக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சச்சின் பைலட், முதல்வர்  கெலாட்டுக்கு எதிராக களமிறங்கி உள்ளார். அவருக்கு ஆதரவாக 30 எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் நீடித்து வருகிறது. இதை சாதகமாக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில் சச்சின் பைலட் கடந்த இரு நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று காங்கிரஸ் தலைமையை சந்திக்க முயற்சித்த நிலையில் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால், அவரை இழுக்க பாஜக முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. டெல்லிக்கு 30 எம்.எல்.ஏ.க்களுடன் சென்ற சச்சின் பைலட் அங்கேயே தங்கி விட்டார்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு  ம.பி.யில் முதல்வர் கமல்நாத்துக்கு எதிராக புகார் கூறி வந்த இளந்தலைவரான ஜோதிராதித்யா சிந்தியா, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி,  பாஜகவின் ஐக்கியமாந நிலையில், அவர் மூலம் சச்சினை இழுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஜோதிர்ராதித்திய சிந்தியாவை டெல்லியில் பைலட் சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பரபரப்பான சூழலில் நேற்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் முதல்வர் கெலாட் வீட்டில் நடைபெற்றது. இதில், தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறப்பட்டது.
பெரும்பான்மை நிரூபிக்க  101 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையான நிலையில், தங்களுடககு  107 எம்.எல்.ஏ.க்களின் (துணை முதல்வர் சச்சின் பைலட் குழுவையும் சேர்த்து) ஆதரவு இருக்கிறது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில், பாஜகவில்  72 எம்.எல்.ஏ.க்கள்  மட்டுமே உள்ளனர். இவர்கள் மாற்றுக் கட்சகிளை சேர்ந்தவர்களையும், சுயேச்சைகளை இழுத்தாலும், அவர்களால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாத சூழலே நிலவி வருகிறது.
அதனால், சச்சின் பைலட்டை  வளைக்க காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. சச்சினுக்கு ஆதரவாக உள்ள 30 எம்எல்ஏக்களைக் கொண்டுமீண்டும் அட்சியை கைப்பற்ற பாஜக கனவு கண்டு வருகிறது.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ள உள்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் களமிறங்கி உள்ளனர். அவர்களில் சிலர் சச்சினுக்கு முதல்வர் பதவி வழங்கி, பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில்  ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், பாஜக தனது கட்சி எம்.எல்.ஏ.களுக்கு ரூ. 2000 கோடி அளவிற்கு பேரம் பேசி வருவதாக வும், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்து வருவதாகவும் முதல்வர்  அசோக் கெலாட் அதிரடியாக குற்றம்சாட்டி உள்ளார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்த மாநில பாஜக காத்துக்கொண்டிருக்கிறது. சச்சின் பைலட்டிடம் இருந்து கிரின் சிக்னல் கிடைக்கும் என நம்பிக்கையோடு இருக்கிறது.  ஒருவேளை சச்சின் பைலட் பாஜக ஆதரவு முடிவு எடுத்தால், தற்போதைய சூழலை சுட்டிக்காட்டி, அசோக் கெலாட் தலைமை யிலான மாநில அரசு பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் மூலம் பாஜக வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமன்றத்தில் கெலாட் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டால், பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரவும் தயாராக இருப்பதாகவும்,  பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சி அமைக்கவும் பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா பரபரப்புக்கு இடையில், அங்கு அரசியல் பரபரப்பும் சேர்ந்து  மேலும் பரபரப்பை உருவாகி வருகின்றன.

ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை
காங்கிரஸ் கட்சி 112
பாரதியஜனதா கட்சி 73
ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சிக்கு 3 எம்.எல்.ஏ.க்கள் ,
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 எம்.எல்.ஏ.க்கள்,
பாரதிய பழங்குடியினர் கட்சிக்கு 2 எம்.எல்.ஏ.க்கள்,
ராஷ்டிரிய லோக்தளம் கட்சிக்கு 1 எம்.எல்.ஏ.வும்,
சுயேட்சைகள் 13 பேரும் உள்ளனர்.