ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அமைச்சரவை பதவி ஏற்பு: கவர்னர் பதவி பிரமாணம்

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநில அமைச்சரவை இன்று பதவி ஏற்றது. புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் கல்யாண்சிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஏற்கனவே கடந்த 17ந்தேதி ராஜஸ்தான் மாநில முதல்வராக  மூத்த காங்கிரஸ்  தலைவர் அசோக் கெலாட்டும்,  மாநில துணைமுதல்வராக சச்சின் பைலட்டும் பதவி ஏற்றிருந்த நிலையில், மாநில அமைச்சரவை இன்று பதவி ஏற்றது.

நடைபெற்று  முடிந்த ராஜஸ்தான் சட்டமன்ற  தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதைத்தொடர்ந்து, ஜெயப்பூரில் உள்ள ஆல்பர்ட் மண்டபத்தில் பதவிஏற்பு விழா கடந்த 17ந்தேதி  நடைபெற்றது.  மாநில கவர்னர் கல்யாண்சிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மட்டுமல்லாமல்,  முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா, திமுக தலைவர்  ஸ்டாலின். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, சரத்பவார்  உள்பட கூட்டணிக்கட்சி தலைவர்கள் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இங்த நிலையில் காங்கிரஸ் அமைச்சரவை இன்று பதவி ஏற்றது. மாநில அமைச்சர்களாக ஒரு பெண் அமைச்சர் மம்தா பூகேஷ்  உள்பட 23 பேருக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த அமைச்சரவையில் அரச குடும்பத்தை சேர்ந்த பரத்பூர் மகாராஜா விஷ்வேந்திர சிங் மற்றும், சி.பி.ஜோஷி, பரத்சிங், முன்னாள் சபாநாயகர் திபேந்திரா சிங் உள்பட பலர் பங்கு பெற்றுள்ளனர்.

இந்த அமைச்சரவை 30 பேர் கொண்ட அமைச்சரவையாக மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் மேலும் சிலர் தேர்வு செய்யப்பட்டு அமைச்சர்களாக நியமனம் செய்யப்படுவார்கள் என்று முதல்வர் கெலாட் தெரிவித்து உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.