ரேஷன் தேவையா? நான் ஏழை என வீட்டில் போர்ட் மாட்டு : ராஜஸ்தான் அரசு

ஜெய்ப்பூர்

ரேஷனில் மானிய உணவுப் பொருட்கள் பெறும் வீடுகளில் நான் ஏழை என போர்ட் மாட்டும்படி அறிவித்து உள்ளது ராஜஸ்தான் அரசு.

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள டௌசா மாவட்டத்தில் இந்த கேலிக்கூத்து நடந்துள்ளது.

வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு ராஜஸ்தான் அரசு மானிய விலையில் ரேஷன் மூலம் உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது.  இது போல உணவுப் பொருட்கள் பெறும் வீடுகளில் நான் ஏழை என போர்ட் மாட்ட வேண்டும் அல்லது பெயிண்ட் செய்திருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.   சில வீடுகளில் மாவட்ட நிர்வாகமே பெயிண்ட் செய்துள்ளது.  அதுவும் ஒரே வீட்டில் இரு இடங்களில்.   வசதியானவர்களுக்கு மானிய விலை உணவுப் பொருட்கள் வழங்கப்படாமல் தவிர்க்கவே இந்த ஏற்பாடு எனக் கூறப்படுகிறது.

மானிய உணவுப் பொருட்கள் பெறுபவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரும் சிறுபான்மை மக்களுமே ஆவார்கள்.  இந்த அறிவிப்பு அவர்களுக்கு மிகுந்த அதிருப்தி ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது.  இந்த அறிவிப்பு போர்டு அல்லது பெயிண்ட் செய்ய அரசு தரப்பில் ரூ 750 பண உதவி தரப்படுவாதாக தெரிகிறது.

இது குறித்து மாநில காங்கிரஸ் செய்தியாளர் மணீஷ் திவாரி கூறுகையில் ரேஷனில் பொருட்கள் பெறுவது பயனாளிகளின் சட்டபூர்வமான உரிமை என்றும் அது அரசிடமிருந்து கிடைக்கும் உதவி அல்ல என்று கூறியுள்ளார்.  மேலும் பல சமூக ஆர்வலர்களும் இது ஏழைகளை அவமதிக்கும் செயல் என கருத்து தெரிவித்து உள்ளனர்.