ஜெய்ப்பூர்

ராஜஸ்தானில் வசித்து வரும் குஜ்ஜார் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ராஜஸ்தானில் உள்ள பரத்பூர், டவுசா, கராலி ஆகிய மாவட்டங்களில் குஜ்ஜார் இன மக்கள் வசித்து வருகின்றனர்.    தங்களுக்கு மாநில அரசு வேலை வாய்ப்புகளில் 5% இட  ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.   ஆனால் அரசு இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.   இதைத் தொடர்ந்து குஜ்ஜார் இன மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

வசுந்தர ராஜே தலைமையில் அமைந்துள்ள பாஜக அரசு இந்தப் போராட்டத்துக்குப் பின்  இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தது.  அதைத் தொடர்ந்து குஜ்ஜார் இன மக்கள் போராட்டத்தை நிறுத்திக் கொண்டனர்.   தற்போது ராஜஸ்தான் அரசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “ராஜஸ்தான் அமைச்சரவை கூட்டத்தில் குஜ்ஜார் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.   அதன் படி குஜ்ஜார் உட்பட 5 பிரிவினருக்கு ஏற்கனவே உள்ள பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கிட்டில் 1% உள் ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.