குஜ்ஜார் இன மக்களுக்கு 5%, மற்றவர்களுக்கு 4% சதவீத இட ஒதுக்கீடு: ராஜஸ்தான் சட்டமன்றத்தில் மசோதா தாக்கல்

ஜெய்ப்பூர்:

டஒதுக்கீடு வலியுறுத்தி ராஜஸ்தானில் உள்ள குஜ்ஜான் இன மக்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு மாநிலத்தையே முடக்கி வந்த நிலையில்,  குஜ்ஜார் இன மக்களுக்கு கல்வி வாய்ப்பில் 5 சதவிகிதம் இடஒதுக்கீடும், மற்ற இனத்தவர்களுக்கு 4 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்யும் சட்ட திருத்த மசோதா ராஜஸ்தான் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திருத்த மசோதாவை ராஜஸ்தான் எரிசக்தித்துறை மந்திரி பி.டி.கல்லா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

நாடு முழுவதும் பல்வேறு வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டு வரும், ராஜஸ்தான் மாநிலத்தில் வசித்து வரும் குஜ்ஜார் இன மக்களும்,  தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று போராட்டத்தில் குதித்தனர். ஏற்கனவே கடந்த 2007ம் ஆண்டு முதல் அவர்கள் இடஒதுக்கீடு கேட்டு போராடி வரும் நிலையில், தற்போது மத்திய அரசு உயர்ஜாதியினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கியதை தொடர்ந்து,   குஜ்ஜார் சமுகத்தினரும், தங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் ரெயில், பஸ் போக்குவரத்தை தடை செய்து போராட்டத்தை முன்னெடுத்து வந்தால், மாநிலம் முழுவதும் கடும் போக்குவரத்து பிரச்சினை ஏற்பட்டது.

பல இடங்களில் வாகனங்கள் தீ வைக்கப்பட்டதால், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் வெடித்தது.  இதையடுத்து போராட்டக்காரர்களின் தலைவரான  குஜ்ஜார் சமூக தலைவர் கிரோரி சிங் பெயின்ஸ்லாவுடன்  முதல்வர் அசோக் கெலாட் உத்தரவின்பேரில், அமைச்சர் விஸ்வேந்திர சிங் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி நீரஜ் பவான் ஆகியோர்பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. தொடர்ந்து இதுகுறித்து ஆலோசனை நடத்திய மாநில அரசு, அவர்களுக்கு 5 சதவிகித இடஒதுக்கீடு வழங்க தீர்மானித்தது.

அதன்படி  ராஜஸ்தான் மாநில அரசின் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சட்டத்தில் திருத்தம் செய்து மற்றும் 4 இதர சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

தற்போது அம்மாநிலத்தில் 21 சதவீதமாக இருக்கும் இட ஒதுக்கீட்டு அளவை 26 சதவீதமாக உயர்த்தும் இந்த சட்டத்திருத்த மசோதாவை ராஜஸ்தான் எரிசக்தித்துறை மந்திரி பி.டி.கல்லா தாக்கல் செய்தார்.

இதையடுத்து குஜ்ஜார் சமூக மக்கள் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.