ஜெய்ப்பூர்:

னியார் நிறுவனங்களில், மாநிலத்தை சேர்ந்த மக்களுக்கே 75 சதவிகிதம் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று என்ற புதிய சட்டத்தை அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் மாநில காங்கிரஸ்  அரசு நிறைவேற்ற தயாராகி வருகிறது.

சமீபத்தில் ஜெகன் மோகன்ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநிலத்தில், தனியார் நிறுவனங் களில் 75 சதவீதம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

நாடு முழுவதும் வேலைவாய்ப்பு குறைந்து வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலும், ஏராள மானோர் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர். தனியார் நிறுவன வேலைகளில் மாநிலத்தைச் சேர்ந்த உள்ளூர் மக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவது குறைந்து வரும் நிலையில்,  75 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான வாய்ப்பை ராஜஸ்தான் அரசு ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  ராஜஸ்தான் திறன் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக் கழகத்தின் (ஆர்.எஸ்.எல்.டி.சி) நிர்வாக இயக்குநர் டாக்டர் சமித் சர்மா,   தனியார் வேலைகளில் உள்ளூர்வாசிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆந்திர அரசு சமீபத்தில் சட்டசபையில் நிறைவேற்றியது என்றார். அதைத்தொடந்து, மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தும் தனியார் துறையில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதற்கான சட்டத்தை தனது அரசாங்கம் முன்வைத்து  உள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான  ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசும் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முன்வந்துள்ளது. அதன்படி,  இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ); தொழிற்சாலைகள் மற்றும் கொதிகலன்கள் துறை; கைத்தொழில் துறை; மற்றும் ஆர்.எஸ்.எல்.டி.சி தவிர தொழிலாளர் துறை  போன்ற துறைகளில் மாநில மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

இந்த திட்டம் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் படி  முக்கிய துறை அதிகாரிகள் கலந்துகொள்ளும்  ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.