ஜெய்ப்பூர்

சி பி எஸ் இ ஏற்கனவே பாடங்களைக் குறைத்தது போல் ராஜஸ்தான் அரசும் பாடங்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக நாடெங்கும் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. கொரோனா பாதிப்பு மேலும் மேலும் அதிகரிப்பதால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அரசு ஒரு முடிவு செய்ய முடியாத நிலையில் உள்ளது.  மாநில மற்றும் மத்திய அரசுகள் எந்தப் பள்ளியும் பெற்றோர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளது.

பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு எடுக்காததால் பள்ளிகளின் பாடத்திட்டங்களில் இருந்து சில பாடங்களைக் குறைப்பதாக சி பி எஸ் இ அறிவித்துள்ளது.  இதில் சில முக்கியமான பாடங்கள் குறைக்கப்பட்டது நாடெங்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.   நேற்று வெளியான அறிவிப்பில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டங்களில் பாடம் குறைப்பு குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில அரசு பள்ளிக்கல்வி பாடத் திட்டங்களில் இருந்து பாடங்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.    தற்போதுள்ள நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளிகள் இந்த மாதம் வரை திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.  இது மேலும் நீட்டிக்க வாய்ப்புள்ளது.