ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இனி நீதிபதிகளை மை லார்ட் என அழைக்க வேண்டாம் என வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டிஷார் காலத்தில் நீதிபதிகள் பெரும்பாலும் வெள்ளைக்கார பிரபுக்களாக இருந்தனர்.  அவர்களை இந்திய வழக்கறிஞர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது ”மை லார்ட்” என அழைத்து வந்தனர்.  அத்துடன் நீதிபதியை பற்றி குறிப்பிடும் போது ‘யுவர் லார்ட்ஷிப்’ என குறிப்பிடுவது வழக்கமாகும்.

ஆங்கிலத்தில் மை லார்ட் என அழைக்கும் போது எனது பிரபுவே எனவும், யுவர் லார்ட்ஷிப் என்னும் போது தங்கள் பிரபுத்துவத்துக்கு எனவும் நேரடி பொருள் கொள்ள முடியும்.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைவரும் சமம் என உள்ளதால் இவ்வாறு அழைப்பதற்கு எதிர்ப்பு எழுந்து வருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி அனைவரும் சமம் என்பதால் கடந்த 14.07.2019 அன்று நடந்த கூட்டத்தின் படி இனி வழக்கறிஞர்கள் நீதிபதிகளை மை லார்ட் எனவும் யுவர் லார்ட்ஷிப் எனவும் அழைக்க வேண்டாம் என இந்த நீதிமன்றம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.