ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில் கடந்த 2ம் தேதி நடந்த முழு அடைப்பு போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரம் தொடர்பாக ஆயிரம் பேர் மீது 250 வழக்குகளை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பியூசிஎல் தலைமையிலான சமூகம் மற்றும் மனித உரிமைக்கான அமைப்பினர் டிஜிபி கல்கோத்ரா மற்றும் உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கத்தாரியாவை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

2007ம் ஆண்டு மார்ச் மாதம் சாலை விபத்தில் இறந்த பூள் சிங் என்பவர் மீது 2018 ஏப்ரலில் கலவர வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் சிங் என்பவர் 2017ம் ஆண்டு இறந்துவிட்டார். ஆனால் அவரது பெயர் கலவர வழக்கு பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அதேபோல் ரோஷன் முன்தோதியா என்பவர் மீது அரசு சொத்தை சேதப்படுத்தியதாக நீமா கா தானா பகுதியில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே நபர் மீது ஜெய்ப்பூரிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு நகரங்களுக்கும் இடையே 150 கி.மீ., தூரம் உள்ளது. ஒரே நபர், ஒரே நேரத்தில் எப்படி 2 இடங்களில் கலவரத்தில் ஈடுபட்டிருக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து பியூசிஎல் அமைப்பை சேர்ந்த கைலாஷ் மீனா கூறுகையில், ‘‘கலவரத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை விட்டுவிட்டு தலித்கள் மீது அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. இறந்தவர்கள், படுக்கையில் இருந்து எழ முடியாத நிலையில் உள்ளவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்சி எஸ்டி சமூதாயத்தை சேர்ந்த அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.