மாடு மேல் உள்ள இரக்கம் மனிதனுக்கு இல்லையா? :ராகுல் காந்தி வினா

டில்லி

ராஜஸ்தானில் ஆல்வார் பகுதியில் பசு காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞருக்கு முன்பு மாடுகளை காப்பாற்றிய காவலர்களுக்கு ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் அருகே உள்ளது ராம்கர் என்னும் கிராமம்.   கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரு இஸ்லாமிய இளைஞர்கள் அந்த கிராமத்தின் வழியே இரு பசு மாடுகளுடன் வந்துள்ளனர்.   அவர்களை ஒரு கும்பல் வழி மறித்து அவர்கள் பசுக்களை கடத்திச் செல்வதாக குற்றம் சாட்டியது.   அத்துடன் அந்த கும்பல் அந்த இளைஞர்களை  கடுமையாக தாக்கி உள்ளது.

ஒரு இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.   அந்த ஆத்திரத்தில் மற்றொரு இளைஞரான ரக்பர் கான் என்பவரை கும்பல் கடுமையாக தாக்கி உள்ளனர்.   தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினரைக் கண்டதும் கும்பல் ஓடி விட்டது.    தப்பி ஓடிய இளைஞரும் சிறிது தூரத்தில் மயங்கி விழுந்து விட்டார்.

விரைந்து வந்த காவலர்கள் ஒரு மினி வேனை பிடித்து அந்த பசுக்களை பசுக் காப்பகத்துக்கு முதலில் வைத்துள்ளனர்.   அதன் பிறகு அந்த இளைஞர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.   அத்துடன் வழியில் ஒரு தேநீர்க்கடையில் வாகனத்தை நிறுத்தி தேநீர் அருந்தி விட்டு காவலர்கள் மெதுவாக அவர்களை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரக்பர் கான் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.   சுமார் 4 கிமீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வர 3 மணி நேரமா என மருத்துவர்கள் கேட்டதற்கு காவலர்கள் முதலில் பசுக்களை காப்பகம் அனுப்பி விட்டு வந்ததால் தாமதம் ஆனதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நாடே பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.

இந்த நிகழ்வை ஒட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில்  அடிபட்ட இருவரை விட்டுவிட்டு மாடுகளை முதலில் காப்பாற்றியதையும்  பசுக்காவலர்களால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடும் ஒருவரை வைத்துக் கொண்டு தேநீர் அருந்தியதையும் கடுமையாக தாக்கி உள்ளார்.   மேலும் இதுதான் மோடியின் காட்டுமிராண்டித்தனமான புதிய இந்தியா எனவும் விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.