ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில், அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு மெஜாரிட்டி நிரூபிக்க சட்டமன்றத்தை கூட்ட கவர்னர் அனுமதி வழங்கிய நிலையில், அடுத்த திருப்பமாக,  அசோக் கெலாட் அரசுக்கு எதிராக வாக்களிக்க எம்எல்ஏக்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலின்போது,  107 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன்  காங்கிரஸ்  கட்சி  ஆட்சி அமைத்தது.
ஆனால், முதல்வர் கெலாட்டுக்கும், துணைமுதல்வர் சச்சினுக்கும் இடையே நடைபெற்ற உள்கட்சி மோதல் காரணமாக, சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 18 பேர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுஉள்ளனர். மேலும், அவர்களது பதவியை பறிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில்,  ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்துள்ளது.
இதற்கிடையில், பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து கடந்த ஆண்று இறுதியில்  6 எம்எல்ஏக்கள் விலகி காங்கிரஸில் சேர்ந்திருந்தனர்.  இவர்கள் காங்கிரஸில் சேர்ந்த இரு நாட்களுக்குப்பின், 6 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் எம்எல்ஏக்களாகவே கருதப்படுவார்கள் எனப் பேரவைத் தலைவர் அறிவித்தார். இதனால் காங்கிரஸின் பலம் பேரவையில் 107 ஆக அதிகரித்தது. ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி, அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.

இந்த நிலையில், தற்போது, அசோக் கெலாட் பெரும்பான்மை நிரூபிக்க 101 எம்எல்ஏக்கள் தேவை . ஆனால், இந்த சூழலில் பிஎஸ்பி கொறடா, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்களும்  கெலாட் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே சச்சின் பைலட் மற்றும் 18 எம்எல்ஏக்கள் கெலாட்டுக்கு எதிராக உள்ள நிலையில், தற்போது பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்களும், கெலாட்டுக்கு எதிராக வாக்களிக்க உத்தரவிட்டு உள்ளதால்,  கெலாட் அரசுக்கு மீண்டும் சிக்கல் உருவாகி உள்ளது.
சபாநாயகர் வாக்கு மற்றும் பிஎஸ்பி,  சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவில் நம்பிக்கை வாக்கெடுப்பை கெலாட் எதிர்கொள்ளும் நிலையில் பிஎஸ்பி கொறடாவின் உத்தரவு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிஎஸ்பி கட்சி கொறடா மிஸ்ரா

தற்போதைய நிலையில், ராஜஸ்தான் சட்டமன்றத்தில்  பாஜகவில்  72 எம்.எல்.ஏ.க்கள்  மட்டுமே உள்ளனர். இவர்கள் மாற்றுக் கட்சகிளை சேர்ந்தவர்களையும், சுயேச்சைகளை இழுத்தாலும், அவர்களால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாத சூழலே நிலவி வருகிறது.
ஆனால்,  சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் மாற்றுக்கட்சி எம்எல்ஏ க்கள், சுயேச்சை எம்எல்ஏக்களைக் கொண்டு, கெலாட் அரசை முடக்க அங்கு அரசியல் களேபரங்கள் அரங்கேறி வருகின்றன.
இதற்கிடையில்,   பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் காங்கிரஸில் சேர்ந்ததை ரத்து செய்யக் கோரி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் பாஜக எம்எல்ஏ சார்பில் மனுத்தாக்கலும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கூறியுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளரும் கொறடாவுமான சந்திர மிஸ்ரா,  பகுஜன் சமாஜ் கட்சி என்பது தேசியக் கட்சி. அரசியலமைப்புச் சட்டம் 10-வது பட்டியலில், 4-வது பத்தியின்படி, எந்த மாநிலக் கட்சியுடனும் தேசியக் கட்சியை இணைக்க முடியாது. ஆதலால், 6 எம்எல்ஏக்களும் இன்னும் பகுஜன் சமாஜ் கட்சிஎம்எல்ஏக்கள்தான்.
ஆதலால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக 6 எம்எல்ஏக்களும் வாக்களிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று மிரட்டி உள்ளார்.