மிகக்குறைந்த இலக்கு – சென்னையை சாதாரணமாக வென்ற ராஜஸ்தான்!

அபுதாபி: சென்னை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது ராஜஸ்தான் அணி.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் வெறும் 125 ரன்களே அடித்தது. இதன்மூலம் தற்போதைய ஐபிஎல் தொடரில், இதுவரையான போட்டிகளிலேயே குறைந்தளவு ரன்னை இலக்காக நிர்ணயித்தது.

மிக எளிய இலக்க‍ை நோக்கி பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு துவக்கம் அதிர்ச்சியாக அமைந்தது. குறைந்த ரன்களிலேயே அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்தது.

ஆனால், கேப்டன் ஸ்மித்தும், ஜோஸ் பட்லரும் ஆட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டனர். குறைந்த ஸ்கோர் என்பதால், ஸ்மித் மிக நிதானமாக ஆடினார். ஆனால், பட்லர் சற்று வேகமாக ஆடினார்.

ஸ்மித் 34 பந்துகளில் 26 ரன்களே அடித்தார். ஆனால், பட்லர் 48 பந்துகளில் 70 ரன்கள் அடித்து வெற்றியை விரைவாக்கினார்.

முடிவில், ராஜஸ்தான் அணி 17.3 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை எடுத்து எளிதாக வென்றது.