யு டியூப் மூலம் ஏடிஎம்மில் திருட கற்றுக் கொண்ட காவலர் மகன்

சுரு, ராஜஸ்தான்

டிஎம் களில் இருந்து பணம் திருடியதாக ஒரு முன்னாள் காவலரின் மகனும் அவரது இரு கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் நௌரான் நகரத்தில் வசிப்பவர் 20 வயதான மனீஷ் மீனா.  இவரது தந்தை காவல்துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.  இவருடைய நண்பர்கள் மகேந்திர மீனா (வயது 24) மற்றும் சாஜுராம் குஜ்ஜார்.(வயது 19) ஆகியோரும் அதே நகரில் வசித்து வந்தனர்.   இவர்கள் மூவரும் ஏடிஎம் களில் இருந்து திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ராஜேந்திர குமார், “கடந்த சில நாட்களாக ராஜஸ்தான் மற்றும் பல மாநிலங்களில் ஏ டி எம் களில் இருந்து கார்டு மூலம் பணம் திருட்ப்பட்டுள்ளதாக பல புகார்கள் வந்துள்ளன.  இது குறித்து சுரு பகுதியில் உள்ள காவல் அதிகாரிகள் தனிப்படை அமைத்து தேடி வந்தோம்.  எங்கள் தேடுதலில் இவர்கள் மூவரும் சிக்கி உள்ளனர்.   இவர்கள் ஏடிஎம் மில் இருந்து எப்படி பணம் திருடுவது என்பதை யூ டியூப் மூலம் கற்றுக் கொண்டதாக கூறி உள்ளனர்.

மனிஷ் மற்றும் மகேந்திரா இருவரும் ஏடிஎம் செல்வார்கள்.   அங்குள்ள முதியோர் அல்லது எழுத்தறிவு இல்லாதோருக்கு உதவுவதாக நடிப்பார்கள்.   அவர்களுக்கு பணம் எடுக்க உதவுவது போல் நடித்து அவர்களுடைய ஏ டி எம் கார்டை மாற்றி விடுவார்கள்.   அவர்கள் சென்றதும் உடனடியாக தங்களிடம் உள்ள கார்டு மூலம் அனைத்து பணத்தையும் எடுத்துக் கொண்டு தயாராக உள்ள காரில் தப்பித்து விடுவார்கள்.

ஏடிஎம் வாசலில் காரில் சாஜுராம் தயாராக காத்திருப்பார்.   தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதை அறிந்து ஏடிஎம் க்கு ஓடி வருபவர்கள் இவர்களை கண்டு பிடிக்கும் முன் அந்த இடத்தை விட்டு வேறு இடம் சென்று விடுவார்கள்.  இது போல் இவர்கள் இதுவரை நூற்றுக்கணக்கான பேரை ஏமாற்றி உள்ளனர்.  தற்போது இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார்,