ராஜஸ்தான் : பாஜக அரசின் உள்ளாட்சி துறை தேர்தல் உத்தரவை மாற்றிய முதல்வர்

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தில் முந்தைய பாஜக அரசின் உத்தரவுகளை தற்போதைய காங்கிரஸ் அரசு தொடர்ந்து மார்றம் செய்து வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி புரிந்த பாஜக பெரும்பான்மை இழந்தது. அதை ஒட்டி காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாத் மற்றும் துணை முதல்வராக சச்சின் பைலட் ஆகியோர் பதவி ஏற்றுள்ளனர். முந்தைய பாஜக அரசு அறிவித்த உத்தரவுகளை தற்போதைய அரசு மாற்றி வருகிறது.

அவ்வகையில் முந்தைய அரசு தேசிய சின்னத்துக்கு பதில் பண்டிட் தின் தயாள் உபாத்யாயாவின் படத்தை அனத்து அரசு ஆவணங்களிலும் கடிதத் தாட்களிலும் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டதை காங்கிரஸ் அரசு மாற்றியது. அரசு ஆவணங்களில் கட்சி சார்பானவர்கள் புகைப்படம் இருக்கக் கூடாது என்னும் அரசு விதிமுறைக்காக இந்த உத்தரவு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

முந்தைய பாஜக அரசு பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிடுபவர்கள் வீட்டில் கழிப்பறைகள் இருக்க வேண்டும் எனவும் குறைந்த பட்ச கல்வி தகுதி அவசியம் எனவும் கடந்த 2015 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இவ்வாறான உத்தரவு நாட்டில் முதல் முறையாக இடப்பட்டது. இதற்கு அப்போதைய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்பு தெரிவித்தது. பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவோர் வீட்டில் கழிப்பறை அவசியம் இருக்க வேண்டும் என்பது பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்துக்கான விளம்பரம் என காங்கிரஸ் அப்போது தெரிவித்தது.

இதை ஒட்டி தற்போது பதவி ஏற்றுள்ள காங்கிரஸ் அரசு பாஜகவின் உத்தரவை ரத்து செய்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு அரசால் அடிப்படை கல்வி அளிக்க முடியாத நிலையில் உள்ள போது இவ்வாறான உத்தரவு அர்த்தமற்றது என தெரிவித்துள்ளது.