ரத்பூர், ராஜஸ்தான்

டந்த 2012ஆம் ஆண்டு, ராஜஸ்தானில் ஒரு தந்தை தனது பிறந்த குழந்தையுடன் மிதி ரிக்‌ஷாவை ஓட்டிய புகைப்படம் வெளிவந்து பரபரப்பானது.  அந்த ரிக்‌ஷா ஓட்டுனர் மரணம் அடைந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரை சேர்ந்தவர் பப்லு கோஹ்லி. சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டி பிழைத்து வந்தார். இவர் மனைவி நான்கு வருடங்களுக்கு முன்பு பிரசவத்தில் உயிர் இழந்தார்.  அந்தக் குழந்தையை கவனிக்க வீட்டில் யாரும் இல்லாததால்,  குழந்தையை கழுத்தில் தூளி கட்டி சுமந்தவாறு ரிக்‌ஷா ஓட்டி வந்தார்.  குழந்தைக்கு தாமினி என பெயரிட்டு வளர்த்து வந்தார்.

பப்லு குழந்தையுடன் ரிக்‌ஷா ஓட்டுவது, புகைப்படம் எடுக்கப்பட்டு, அனைத்து செய்தித்தாளிலும் வெளிவந்தது.   இதைக்கண்டு இரக்கம் கொண்ட ஒருவர் நன்கொடை அளித்தார்.  அந்த நன்கொடை ஐந்து பேர் கொண்ட கமிட்டி மூலம் நிர்வகித்து, வங்கியில் டிபாசிட் செய்யப்பட்டது,  ரூ 23 லட்சத்துடன் ஆரம்பிக்கப்பட்ட வங்கிக் கணக்கு தற்போது ரூ.35 லட்சம் ஆகியுள்ளது.  அந்த கணக்கை நிர்வாகிக்கும் பரத்வாஜ்,  குழந்தையின் பராமரிப்புக்காக, பப்லுவிடம் மாதம் ஒரு கணிசமான தொகையை அளித்து வந்தார்.

கையில் பணம் வர ஆரம்பித்ததும் பப்லுவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது.  முதலில் எப்போதோ ஒருமுறை என இருந்த குடிப்பழக்கம் அதிகமாகி, அவர் குடிக்கு அடிமை ஆனார்.   குழந்தையை கவனிப்பதை நிறுத்திவிட்டார்.  ரிக்‌ஷா ஓட்டுவதும் இல்லை.  தாமினி பசியால் வாடுவதைக் கண்டு அரசு மூலம் குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டாள்.   குழந்தையும் உடன் இல்லாததால் மேலும் மேலும் குடித்து உடல்நலம் கெட்டு மரணம் அடைந்தார் பப்லு.

அக்கம் பக்கத்தினர்  அவர் வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதை கவனித்து காவல்துறைக்கு தகவல் தந்தனர்.  அதற்குள் அவர் இறந்து 2 நாட்கள் ஆகி விட்டது.   ஒரு தொண்டு நிறுவனம் அவரது தகனச் செலவை ஏற்றுக் கொண்டது.

தாமினிக்கு இப்போது நான்கு வயது ஆகிறது.

தற்போது இருக்கும் பணத்தைக் கொண்டு தாமினியால் நன்கு படித்து முன்னேற முடியும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை கமிட்டி செய்யத் தயாராக இருப்பதாகவும் பரத்வாஜ் தெரிவித்தார்.   அரசும், தாமினிக்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாக பரத்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் நரேந்திட குமார் குப்தா தெரிவித்துள்ளார்.

என்னதான் பணம் இருந்தாலும், அந்த குழந்தை அனாதை ஆனது கொடுமை எனவும், பப்லுவின் குடிப்பழக்கம் தான் அவர் மகளை இப்படி ஆக்கியது என மக்கள் கவலையை தெரிவித்தனர்