டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசனுக்கும் நபீலாவுக்கும், கடந்த 26-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

நேற்று (மே 29), சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிலையில், இன்று (மே 30) பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், நான் சினிமாவில் மட்டும் காதலை ஆதரிப்பவன் கிடையாது. ‘மதங்களைப் பார்க்க மாட்டேன்’ என்று சினிமாவில் மட்டும் சொல்றவன் டி.ராஜேந்தர் கிடையாது. பிள்ளைகள் ஆசைப்பட்டால் துணி வாங்கித் தருகிறோம், பொம்மை வாங்கித் தருகிறோம், பைக் வாங்கித் தருகிறோம். அதேபோல், கல்யாணத்திலும் பிள்ளைகளின் உணர்வை மதிக்கக்கூடிய தாய் – தந்தையாக எல்லோரும் இருக்க வேண்டும் என கூறினார்.

‘சிம்புவுக்கு எப்போது திருமணம்?’ என்று கேட்க பட்ட கேள்விக்கு :-

“இறைவன் அருளால் சீக்கிரம் நடக்கும். வெளிப்படையாகச் சொன்னால், இதுதான் எனக்கு மனத்தாங்கலாக இருக்கிறது. உங்கள் மேல் மனத்தாங்கல் இல்லை. இந்தக் கேள்வியை நீங்கள் கேட்கும் அளவுக்கு இறைவன் என்னை வச்சிருக்கானே, விதி என்னை வச்சிருக்கே… என்னுடைய வருத்தம், ஆதங்கம் எல்லாமே இறைவன் மீதும், விதியின் மீதும்தான். கேள்வி கேட்பது உங்களுடைய கடமை. பதில் சொல்வது என்னுடைய கடமை. ஆனால், பதில் சொல்ல முடியாமல் போவது என்பது என்னுடைய சூழ்நிலை” என்று சற்று கலங்கிய வண்ணம் பதில் அளித்தார் டி.ராஜேந்தர்.