தன்மீது இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரி புகாரளிப்பதை வேறு வகையில் தடுக்க முயன்ற ராஜேஷ் தாஸ்!

சென்ன‍ை: தன்மீது இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரி புகாரளிப்பதை தடுக்க, முன்னாள் தமிழக சிறப்பு டிஜிபி ரா‍ஜேஷ் தாஸ், காவல்துறையை அதிகாரிகளைப் பயன்படுத்திய தகவல் வெளியாகியுள்ளது.

வெளியூரிலிருந்து சென்னை வந்த அந்த இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரியை, செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

பின்னர், டோல்கேட் அருகேயிருந்த ஒரு கட்டடத்திற்கு அவரை அழைத்துச்சென்று, சமரசம் பேசியிருக்கின்றன. ராஜேஷ்தாஸ், அந்தப் பெண் அதிகாரியை சந்திக்க விரும்புகிறார் என்றும், இந்த விஷயத்தை செட்டில் செய்ய விரும்புகிறார் என்றும் அவருக்கு எடுத்துக்கூறப்பட்டுள்ளது. இந்த சமரச விவகாரத்தில் சில சீனியர் காவல்துறை அதிகாரிகளே ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இவை எதற்கும் மசியாத அந்தப் பெண் அதிகாரி, நேராக தலைமைச் செயலகம் வந்து, தனது புகாரைப் பதிவுசெய்துள்ளார்.

இதனையடுத்து, ராஜேஷ்தாஸ், சிறப்பு டிஜிபி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, தற்போது கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார்.