ரஜினியும் டாஸ்மாக்கும் ஒன்னு!: சீமான் அதிரடி

சென்னை:

“ரஜினியை ஆதரிப்பதும் மது போதையும் ஒன்றுதான்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான் அளித்த பேட்டி தற்போது புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

இதில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சீமான் அளித்த பதில்களின் தொகுப்பு.

“44 வருடங்களாக தமிழகத்தில் இருப்பதாலேயே ஒருவர் தமிழராகிவிட முடியாது.

கர்நாடகாவில் ஒன்றேகால் கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பலருக்கு தமிழே தெரியாது. கன்னடம்தான் பேசுகிறார்கள். அவர்களை அங்கு கன்னடர்களாக ஏற்றுக்கொள்கிறார்களா?

மராட்டிய மாநிலத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மராத்திதான் பேசுகிறார்கள். அவர்களை அங்கு மராத்தியர்களாக ஏற்கிறார்களா?

மேற்கத்திய நாடுகள் பலவற்றில் ஈழத்தமிழர்கள் நிரந்தர உரிமை பெற்று வசிக்கிறார்கள். வெள்ளையவர்களைவிட நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்கள். நிறத்திலும் வெள்ளையாக இருக்கிறார்கள். அவர்களை அங்கு வெள்ளையராக ஏற்கிறார்களா?

எம்.ஜி.ஆரை ஆளவிட்டது தவறு. கடந்த 800 ஆண்டுகளாகவே இந்தத் தவறை செய்துவருகிறோம். அந்த தவறில் இருந்து பாடம் கற்றுக்கொள்கிறோம். இனி அப்படி நடக்கக்கூடாது.

போர் வந்தால் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் ரஜினி.  ஈழத்தில் கடும் போர் நடந்தது லட்சக்கணக்கில் தமிழர் கொல்லப்பட்டார்கள். . நீருக்காக போராடியும் செத்தோம். இப்படி போரிலும் நீரிலும் செத்தபோது ரஜினி வரவில்லையே…

இப்படி மக்கள் பிரச்சினை எதற்காகவும் வராமல், வந்தால் முதல்வராத்தான் வருவேன் என்பது என்ன நியாயம்.

கேரளாவிலும் திரைப்படம் இருக்கு. இங்கே ரஜினி மாதிரி மோகன்லால், மம்முட்டி புகழ் பெற்ற சினிமா நட்சத்திரங்கள்தான். ஆனால் அவர்கள் அரசியலில் பிரகாசிக்க முடியாது. அதுதான் அங்கு நிலை.

ஆனால் இங்கே சென்னைக்கு வண்டி ஏறும்போதே, பத்து படம் நடிப்போம் பிறகு முதல்வர் ஆகிவிடுவோம் என்ற எண்ணத்துடன் வருகிறார்கள்.

மக்கள் விரும்பினால் ரஜினியும் முதல்வர் ஆகலாம் என்பதை ஏற்க முடியாது.

மதுவைக்கூட மக்கள் விரும்பித்தான் குடிக்கிறார்கள். அதற்காக அதை எதிர்த்து போராடாமல் இருக்க முடியுமா” என்று சீமான் பேசினார்.