முதன்முறையாக ரஜினி அறிவிப்பு! ரசிகர்கள் அதிர்ச்சி!

துவரை தனது படங்களின் ரசிகர்மன்ற காட்சிகள் குறித்து எந்தவித கட்டுப்பாடும் விதித்திராத நடிகர் ரஜினிகாந்த், 2.o படத்துக்கு முதன் முறையாக கட்டுப்பாடு விதித்துள்ளது  ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினி உள்ளிட்ட பெரிய நட்சத்திர நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது  ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்படும். முதல் காட்சியைப் பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பு ரசிகர்கள் பலருக்கு இருக்கும். இதைப் பயன்படுத்தி ரசிகர் மன்றங்கள், முதல் காட்சி டிக்கெட்டுகளை திரையரங்கு நிர்வாகத்திடம் இருந்து ஒட்டுமொத்தமாக பெற்று, கூடுதல் விலைக்கு விற்பது வழக்கம்.

இந்த கட்டணம், அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் இருந்து பல மடங்கு அதிகமாக இருக்கும். ரஜினி நடித்து வெளியான கபாலி படத்தின் டிக்கெட்டுகள் மூன்றாயிரம் வரை விற்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.  அவரது ரசிகர்கள்  பலரும், “எங்களால் அவ்வளவு விலை கொடுத்து டிக்கெட் வாங்க முடியவில்லை” என்று வருத்தத்துடன் பேசிய வீடியோ காட்சிகளும் வெளியாகின.

அதே நேரம் ரசிகர் மன்ற நிர்வாகிகள், “படம் வெளியாகும்போது, ரஜினிக்கு போஸ்டர், பேனர், கட்அவுட்கள் எல்லாம் வைக்கிறோம். கட் அவுட்டுக்கு பாலாபிசேகம் முதற்கொண்டு பல அபிசேகங்கள் செய்கிறோம். ஊர்வலங்கள் மாலை மரியாதைகள் என்று ஏகப்பட்ட செலவுகள்  இருக்கின்றன. அதற்காகத்தான் ரசிகர் மன்ற காட்சிகளுக்கு கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை செய்கிறோம்” என்கிறார்கள்.

அதே நேரம் திரைத்துறை வட்டாரத்தில், “இந்த ரசிகர் மன்ற காட்சிகள் என்பவை நடிகர்களுக்கு தேவைப்படும் விசயமாக ஆகிவிட்டது. படத்தின் மீது ஒரு பிரம்மாண்டத்தை, ஈர்ப்பை ஏற்படுத்த இந்த முதல் காட்சி அலப்பறைகள் உதவுகின்றன. ரஜினி உட்பட பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு மூன்று நான்கு காட்சிகள்கூட ரசிகர் காட்சிகளாக திரையிடப்படுவது உண்டு” என்கிறார்கள்.

ஆனால் இதுவரை ரசிகர் மன்ற காட்சிகளை மவுனத்துடன் அனுமதித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் முதன் முறையாக இதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளார்.

இது குறித்து ரஜினி ரசிகர் மன்ற தலைமை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ரசிகர் மன்ற காட்சிகளுக்காக பெறப்பட்ட டிக்கெட்டுகளை வெளியில் யாருக்கும் விற்க்ககூடாது. திரையரங்கில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட ரசிகர்களிடம் கூடுதல் கட்டணம் பெறக்கூடாது” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது என்றால், பேனர், கட் அவுட்களுக்கு எப்படி செலவு செய்வது” என்று புலம்புகிறார்கள்.

அதே நேரம், “ரசிகர்மன்ற காட்சி என்கிற முறைகேட்டையும், சட்டத்துக்குப் புறம்பாக கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வந்ததையும் இதுவரை ரஜினி கண்டுகொண்டதில்லை. அரசியல் கட்சி துவங்க இருப்பதாக அறிவித்த பிறகும் அவரது கபாலி பட வெளியீட்டின்போது இது போன்ற முறைகேடுகள் நடந்தன. அப்போதும் அவர் மவுனம் காத்தார். அதனால் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து முதன் முறையாக தனது ரசிகர்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளார்” என்று திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அதோடு, “ரசிகர்களை கட்டுப்படுத்தினால் மட்டும் போதாது. அவர்கள் முதல் ஓரிரு காட்சிகளுக்கான டிக்கெட்டுக்களைத்தான் விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு விற்பார்கள். தொடர்ந்து அடுத்தடுத்த காட்சிகளில் திரையரங்குகளே நேரடியாக ஈடுபடுகின்றன. இதில் விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என்று அனைவருக்கும் பங்கு உண்டு. இந்த கூடுதல் வருமானத்தை வைத்துத்தான் நடிகர்களின் சம்பளமும் உயர்கிறது. இதெல்லாம் ரஜினிக்குத் தெரியாததல்ல. ஆகவே திரையரங்குகளில்  அரசு நிர்ணயித்த கட்டணத்தைத்தான் பெற வேண்டும் என்று தயாரிப்பாளர் மூலமாக அவர் வலியுறுத்த வேண்டும்” என்றும் கூறுகிறார்கள்.