சத்தியநாராயணாவை ஒதுக்கிய ரஜினி!: ரசிகர்கள் மகிழ்ச்சி!

ரஜினி

ஜினி – ரசிகர் சந்திப்பு இன்று நிறைவடைந்தது. ரஜினி பேசிய வார்த்தைகள் தற்போது பலவிதமாக அலசி ஆராயப்படுகிறது. இதில் ரசிகர்களைப் பொறுத்தவரை.. அவர்கள் கூர்ந்து கவனித்த விசயம்..  “சத்தியநாராயணா” என்ற வார்த்தையை ரஜினி உச்சரிக்கிறாரா என்பதைத்தான்.

சத்தியநாராயணா பெயரை புறக்கணித்துவிட்டு “இந்த ரசிகர் சந்திப்பை சிறப்பாக நடத்தி முடிக்க உதவியாக இருந்த சுதாகர், முரளி ஆகியோருக்கு நன்றி” என ரஜினி கூறியது, ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

யார் இந்த சத்தியநாராயணா?

ஆரம்ப காலத்தில் இருந்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகியாக இருந்தவர் சத்தியநாராயணா. ரஜினியின் நெருங்கிய நண்பராக விளங்கியவர்.

துவக்க காலத்தில் ரசிகர்களுக்கும் ரஜினிக்கும் பாலமாக இருந்த இவரது போக்கில் பின்னாட்களில் மாற்றம் ஏற்பட்டதாக ரசிகர்கள் குமுறுனர். இவரை எதிர்த்து ஊடகங்களில் ரசிகர்கள் குற்றம் சாட்டுவதும் வழக்கமாக இருந்தது.

இது குறித்து இன்று சென்னையில் ரசிகர் சந்திப்புக்கு வந்து திரும்பிய  ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர்,, “ஆரம்பத்தில் ரசிகர்களின் மனசாட்சியாக சத்தியநாராயணா விளங்கினார். ஆனால் நாளடைவில் அவர் சர்வாதிகாரி போல செயல்பட ஆரம்பித்தார். குறிப்பாக 1996 சட்டமன்ற தேர்தலில் ரஜினி வாய்ஸ் கொடுத்து, திமுக – தாமாகா கூட்டணி வெற்ற பெற்றவுடன் சத்தியநாராயணா அடியோடு மாறிப்போனார்.

அந்த காலகட்டத்தில் ரஜினி மன்ற நிர்வாகி என்பது மிகுந்த கவுரவத்துக்குரியதாக இருந்தது. அப்போது தனக்கு வேண்டியவர்களுக்கு சத்தியநாராயணா (மாவட்ட ) பொறுப்புகளை கொடுக்க ஆரம்பித்தார். நீண்ட நாட்களாக மன்றத்தில் இருந்தவர்களை புறக்கணித்தார்.  தவிர ஒரே மாவட்டத்தில் இரண்டு மூன்று பேருக்கு பொறுப்புகள் கொடுத்து குளறுபடி ஏற்பட காரணமாக இருந்தார்” என்றார் அந்த மேற்கு மாவட்ட நிர்வாகி.

தங்களது பதில் நடவடிக்கை குறித்து நம்மிடம் பேசினார் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகி:

“சத்தியநாயராயணினி நடவடிக்கைகள்ல பாதிக்கப்பட்ட மூத்த ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரஜினியிடம் புகார் சொல்ல முயன்றோம்.. ஆனால் அவர்களை ரஜினியை சந்திக்கவிடாமல் சத்தியநாராயணா தடுத்துவந்தார்.

சத்தியநாராயணா

“அந்த நிர்வாகி வந்தால் டொனேசன் கேட்டு தொல்லை செய்வார். இந்த நிர்வாகி, தனக்கு வேண்டியவருக்கு பொறுப்பு வேண்டும் என்பார்.” என்றெல்லாம் சொல்லி ரஜினயை, ரசிகர்களிடமிருந்து விலக்கியே வைத்திருந்தார்.

அதே நேரம், தான்தான் ரசிகர் மன்றத்தின் முகம் என்றும், தன்னால்தான் ரசிகர்களை கட்டுப்படுத்தி ஒழுங்காக நிர்வகிக்க முடியும் என்றும் ரஜினியிடம் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தார்.

இவரது நடவடிக்கையால் மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் மனமுடைந்து ரசிகர் மன்ற பணிகளில் இருந்து ஒதுங்க ஆரம்பித்தனர்..

இதற்கு மேல் பொறுக்க முடியாது என்கிற நிலையில்  மூத்த மாவட்ட நிர்வாகிகள் சிலர் ரஜினியை சந்திக்க தொடர் முயற்சி எடுத்தனர். அவரை சந்திக்க முடியாத நிலையில், , ரஜினியின் மனைவி லதாவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. லதாவிடம் தங்கள் மனக்குமுறலை அவர்கள் வெளிப்படுத்தினர்.

அப்போது லதா, “சத்தியநாராயனாவின் நடவடிக்கைகள் குறித்து ஏற்கெனவே எங்களிடமும் சிலர் புகார் அளித்துள்ளனர். அதே அவரை அவ்வளவு சீக்கிரம் விலக்கி வைத்துவிட முடியாது. வி வில் டேக் சம் டைம்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், பெங்களூருவில் இருந்த தனது நண்பர் சுதாகரை, தனக்கு உதவியாக சென்னைக்கு அழைத்தார் ரஜினி. மெல்ல மெல்ல மன்ற பணிகளில் அவரை ஈடுபடுத்தினார்.

இதற்கிடையே சத்தியநாராயணாவின் தந்தைக்கு உடல் நலிவுற்றது. அவரை பக்கத்தில் இருந்து கவனித்துக்கொள்ளச்சொல்லி சத்தியநாராணயாவை அனுப்பினார் ரஜினி. இந்த நிலையில் சத்தியநாராயணாவுக்கும் கிட்னி பிராப்ளம் ஏற்படவே, “மன்றப் பொறுப்பு சுமையானது. உனக்கு அது வேண்டாம். உடலை கவனித்துக்கொள்” என்று கூறிவிட்டார்.

இது நடந்து மூன்று வருடங்கள் இருக்கும்” என்று கூறிய நிர்வாகிகள், தாங்கள் பயந்த விசயத்தையும் நம்முடன் பகிர்ந்துகொண்டனர்:

“இந்த நிலையில்தான் கடந்த  ஏப்ரல் 12 முதல் 16 வரை  ரசிகர்களை சந்திக்க இருப்பதாக அறிவித்தார் ரஜினி. கிட்டதட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நடக்க இருக்கும் சந்திப்பு என்பதால் நாங்கள் மிக உற்சாகமாக இந்த சந்திப்பை எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் இந்த சந்திப்பு குறித்த ஏற்பாடுகளை சத்தியநாராணா செய்ய இருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அதனால் நாங்கள் பயந்து போனோம். மீண்டும் இவரா.. இவர் குளறுபடி செய்துவிடுவாரே என்று அஞ்சினோம்.

லதா

சத்தியநாராயணாவை ரஜினி மீண்டும் அழைத்ததற்குக் காரணம்,  அவருக்குத்தான் மாவட்ட அளவிலான நிர்வாகிகளிடம் நல்ல அறிமுகம் உண்டு என்ற தோற்றத்தை ரஜினியி்டம் அவர் ஏற்படுத்தி வைத்திருந்ததுதான்.

ஆனால் நல்ல வேளையாக வேறுவிதமாக அந்த விவகாரம் முடிந்தது. அதாவது ரசிகர்  சந்திப்பு குறித்து சத்தியநாராயணாவுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்  ரஜினி.  அப்போது பேசப்பட்ட சில தகவல்களை சத்தியநாராயணா லீக் செய்துவிட்டார். இதனால் வருத்தமடைந்த ரஜினி,  ஏப்ரல் மாதம் நடக்க இருந்த சந்திப்பையே ரத்து செய்தார்” என்றா் அந்த நிர்வாகி.

சென்னையைச் சேர்த மூத்த நிர்வாகி ஒருவர், ” சத்தியநாராணாவை முழுதும் ஒதுக்கிய ரஜினி தற்போதைய நிர்வாகி சுதாகர் மற்றும் தனது நண்பர் முரளி ஆகியோரின் பொறுப்பில்  இந்த சந்திப்பை (தற்போது நடந்து முடிந்த) நடத்தும் பொறுப்பை கொடுத்தார். . அவர்களும் திறம்பட நடத்தி முடித்தனர்.

ஆனாலும் நீண்ட நாளாக ரசிகர் மன்ற பொறுப்பில் இருந்த சத்தியநாராயணாவுககும் நிறைவு நாளான இன்று நன்றி தெரிவிப்பாரோ என்று நினைத்தோம். ஆனால் ரஜினி, அவரை முழுதுமாக புறக்கணித்துவிட்டார். சுதாகர் மற்றும் முரளி ஆகியோருக்கு மட்டும் நன்றி தெரிவித்தார்.

இத்தனை நாளாக ரசிகர்களுக்கும் ரஜினிக்கும் இடையே தடைக்கல்லாக இருந்த சத்தியநாராயணாவை ரஜினி ஒதுக்கியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார் அவர்.

நாம் சந்தித்த ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் அனைவரும் சொல்வது இதுதான்: “ரசிகர்களில் சிலர் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து சில பலன்களை அனுபவித்தனர். அப்படிப்பட்டவர்களை ஒதுக்கிவிட்டேன் என்ரு முதல் நாள் சந்திப்பில் பேசும்போதே ரஜினி தெரிவித்தார். அது தற்போது உறுதியாகிவிட்டது. ஆக நிச்சயமாக ரஜினி அரசியலுக்கு வருவார்!”