சென்னை:

முதலமைச்சர் பதவி மீது ஆசை இல்லை என்று கூறிய ரஜினி, கட்சிக்கு ஒரு தலைமை என்றும், ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதே தனது கொள்கை என்று கூறியவர், தனது அரசியல் பிரவேசம் குறித்து தீர்மானமாக ஏதும் தெரிவிக்காமல்…. எப்போதும் போல…  அவரது படத்தின் காமெடி காட்சிபோல ‘மாப்ள நான் இல்ல..ஆனா சட்டை என்னோடது…’  என்று கூறி தமிழக மக்களை மீண்டும் குழப்பி உள்ளார்.

2017ம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவதாக தெரிவித்ததாக கூறிய ரஜினி, அன்றே முதலமைச்சர் நாற்காலி மீது ஆசை இல்லை என்று தெளிவுபடுத்தி இருப்பதாகவும்,  மாற்று அரசியல் கொண்டு வர வேண்டும், நல்ல அரசியல் தலைவர் வர வேண்டும் என்று நினைக்கிறேன்,  பேரறிஞர் அண்ணாவைப் போல் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பது தான் என் ஆசை என்றவர்,

எனது இரத்தத்தில் ஒரு முதல்வரின் குணாதிசயங்கள் இல்லை, நான் சட்டசபையில் உட்கார்ந்து பேசுவதை கற்பனை செய்து பார்க்க முடியாது, இந்த பதவிகளுக்கு நான்  தகுதியானவன் இல்லை என்று கூறிய ரஜினி, அரசியலுக்கு வருவேன் என்று கூறி வருவது பம்மாத்து வேலை என்பதும், அவர் ஒருபோதும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்பதையும் இன்றைய அவரது விளக்கம்  மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.

பேரறிஞர் அண்ணா கொண்டு வந்த தலைவர்கள் தான் தமிழக அரசியலை ஆட்கொண்டிருந்தனர், ஆனால், தமிழகத்தில் தற்போது திறமையான தலைவர்கள் யார் இருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியவர்,  மிகப்பெரிய ஆளுமைமிக்க தலைவர் தற்போது இல்லை,  ஆளுமைமிக்க தவைரின் வாரிசு என்று நிரூபிக்க முயல்பவரை சந்திக்க வேண்டும் என்று கூறினார்

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை, முழு கஜானாவுடன் இருப்பவர்களை தேர்தல் களத்தில் சந்திக்க வேண்டும் என்று கூறியவர்  அசுர பலத்துடன் இருக்கும் 2 மிகப்பெரிய ஜாம்பவான்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது என்று கூறினார்.

(ரஜினியின் இந்த கருத்து காரணமாக, அரசியலுக்கு வந்தால் பணம் செலவாகும், அதை செலவழிக்க தான் தயாராக இல்லை என்பதை நாசூக்காக கூறி விட்டார்)

திமுகவிற்கு வாக்களித்தவர்கள் 30 சதவீதம் கட்சிக்காகவும், 70 சதவீதம் கலைஞருக்காகவும் வாக்களித்த னர், அதிமுகவிற்கு வாக்களித்தவர்கள் 30 சதவீதம் கட்சிக்காகவும், 70 சதவீதம் ஜெயலலிதாவுக்காகவும் வாக்களித்தனர் என்று கூறியவர், தனக்கு  ஏறக்குறைய 8 அல்லது 10 சதவீத வாக்குகள் மட்டுமே உள்ளது,  இதைக்கொண்டு அரசியல் நடத்த முடியுமா என்பதிலும் அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது என்பதும், இன்றைய பேட்டியில் வெளிப்பட்டு உள்ளது.

அதுபோல தமிழக்ததில் ஆட்சி மாற்றம் வேண்டுமானால், ஒரு பெரிய அரசியல் புரட்சி நடக்க வேண்டும் என்று கூறியவர்,  மக்களின் மனநிலையை நாம் மாற்ற வேண்டியிருக்கும், தனக்கு  உள்ள 10 சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு  அரசியலுக்கு வர முடியாது. நான் இப்போது தோற்றால், அடுத்தமுறை தன்னால் போட்டியிட முடியாது, ஏனென்றால் தனக்கு தற்போது வயது 71 ஆகிறது என்று தனது வயதை காரணமாகவும் தெரிவித்து உள்ளார்.

ரஜினியின் இன்றைய அறிவிப்பு … அவர் கட்சிக்கு வருவதை தவிர்த்து வருகிறார்.. என்பது வெளிப்பட்டு உள்ளது… எப்போதும் போல மீண்டும் தமிழக மக்களை குழப்பி உள்ளார்… அவர் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார் என்பது மீண்டும் மீண்டும் உறுதிப்பட்டு உள்ளது…

1996ம் ஆண்டின்போது, ரஜினியின் பேட்டி டிவியில் லைவாக ஒளிபரப்பு செய்யப்பட்டது… தற்போது இணையதளம் வளர்ச்சி காரணமாக, யுடியூப் போன்ற சேனல்களின் உதவியுடன் அனைவரும் மொபைலில் பார்க் கும் வசதி ஏற்பட்டு உள்ளது… இதுஒன்று மட்டும்தான் ரஜினியின் இன்றைய அரசியல் அறிவிப்பில் மாற்றம்… வேறு ஒரு வெங்காயமும் இல்லை…