“கதை திருடிய ஐஸ்வர்யா தனுஷ்!  கண்டுகொள்ளாத ரஜினி!”: பிரபல எழுத்தாளர் புகார் பேட்டி

பிரபல எழுத்தாளர் ஆர்னிகா நாசர் அளித்த பேட்டி, “எக்ஸ்ளூசிவ்: 2.o சர்ச்சை: ஷங்கர் என் கதையை திருடிவிட்டார்!: பிரபல எழுத்தாளர் பேட்டி” என்ற தலைப்பில் நேற்று வெளியானது. அதன் தொடர்ச்சி…

“தமிழ்த்திரை இயக்குநர்கள் மீது அடிக்கடி கதைத்திருட்டு புகார் வருகின்றதே.. இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?”

”ஆகப்பெரும்பாலான திரை இயக்குநர்களுக்கு.. அல்லது யாருக்குமே..  கதைகள் வாசிக்கும் பழக்கம் இல்லை. பத்திரிகையில் சிறுகதைகளோ நாவலோ தொடர்கதைகளோ எழுதியதில்லை. ஒரு இயக்குநரிடம் நான்கைந்து படங்கள் பணிபுரிந்து தொழில் நுட்பம் கற்றுக் கொள்கிறார்கள். அதன்பின் ஹாலிவுட் படங்களையோ கொரியன் படங்களையோ ஈரானியன் படங்களையோ அல்லது ராஜேஷ்குமார் பிகேபி ஆர்னிகாநாசர் கதைகளையோ திருடி படம்  எடுக்கிறார்கள்.”

 “கதைத்திருட்டு புகார் என்பது வழக்கமாகிவிட்டது. ஆனாலும் ஹாலிவுட் கதைகளைத் திருடுகிறார்கள்.. அல்லது தழுவி எடுக்கிறார்கள் என்றுதானே பெரும்பாலும் புகார்கள் வருகின்றன..?”

”விலைஉயர்ந்த வைரம் கிடைக்கும் என்றால் திருடன் வெளியூரிலும் திருடுவான் தான் வசிக்கும் தெருவிலும் திருடுவான். கதையை நேரடியாக யோசிப்பதை விட கதையை திருடி அதனை உல்ட்டா செய்வது பல தமிழ்  சினிமா இயக்குநர்களுக்கு  கைவந்த கலை. உதாரணம் கேஎஸ் ரவிக்குமார். தெனாலி என்கிற படம் ஹூ ஈஸ் பாபு என்கிற ஆங்கிலப்படத்தைத் தழுவியது. 

வை.ராஜா வை

“திரை இயக்குநர்களால் உங்களது வேறு கதைகள் திருடப்பட்டதாக உங்களுக்கு வருத்தம் உண்டா?”

“ஏன் இல்லை… ஆனந்தவிகடனில் “பில்லியனில் ஒருவன்’ எனும் விஞ்ஞான சிறுகதை எழுதினேன்.  அக்கதையை திருடிதான் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் “வை ராஜா வை’ படமெடுத்தார். இதுபற்றி ரஜினிகாந்த்துக்கு எனது ஒரிஜினல் கதை பிரதியுடன் கடிதம் அனுப்பினேன்.  பதில் இல்லை.

எனது கதையை வெளிட்ட  ஆனந்தவிகடன் இதழுக்கும் கடிதம் அனுப்பினேன். அவர்களும் கண்டு கொள்ளவில்லை.

அதே போல இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.

ஏஆர் முருகதாஸின் “கஜினி’ படம் “மொமன்ட்டா’ எனும் ஆங்கில படக்கதையை திருடி எடுக்கப்பட்டது என கூறுவார்கள். அது பாதி உண்மை. பத்து நொடிகளுக்கு மேல் ஞாபகசக்தி இல்லாத ஒரு நோயாளியின் கேஸ் ஹிஸ்டரியை வைத்து தமிழன் எக்ஸ்பிரஸில் “ஹே.. ஹே..  அழகிய தீயே’ எனும்  த்ரில்லர் தொடர்கதை எழுதினேன். அத்தொடர்கதையையும் மொமன்ட்டாவையும் பிசைந்து எடுக்கப்பட்டதுதான் கஜினி படம்!

ஷங்கர் ஏ.ஆர் முருகதாஸ் போன்றவர்களுக்கு ஒரே ஒரு சவால் விடுகிறேன். ஒரே ஒரு சிறுகதை குமுதம் ஆனந்தவிகடன் வாரமலர் போன்ற எதாவது ஒரு இதழில் மாற்று புனைப்பெயரில் எழுதி காட்டுங்கள் பார்ப்போம்.

ஒரிஜினல் கற்பனை சக்தியில் உங்களை விட ஒருபக்க கதை எழுதுபவர் ஜோக் எழுத்தாளர் பலபடி மேலானவர்கள்!”

பாக்யராஜ்

“கதை எழுதியவர்களுக்கு பல இயக்குநர்கள் உரிய அங்கீகாரம் அளிக்க மறுப்பதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?”

” எழுத்தாளர்களின் கதைகளை உரிய அனுமதியோடு திரைப்படமாக எடுக்கும் நாகரீக வழக்கம் தமிழ்த்திரையுலகில் இருந்தது. கல்கியின் தியாகபூமியாச் சொல்லலாம்.. ஏன், புதுமைப்பித்தனின் கதையைத்தான் முள்ளும் மலரும் என மகேந்திரன் எடுத்தார். அதில் கதையாசிரியருக்கு உரிய அங்கீகாரத்தை அவர் மறுக்கவில்லை.

ஆனால்கதை திரைக்கதை வசனம் டைரக்சன் என தன் பெயர் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற ட்ரண்ட்டை பாக்யராஜ் ஆரம்பித்து வைத்தார் என நினைக்கிறேன்.  கதை தன் பெயரில் இருந்தால்தான் வேற்றுமொழி ரைட்ஸ்களை விற்று கோடி கோடியாக பணம் பார்க்க முடியும். இன்று இந்த மனோபாவம் ஏராளமான இயக்குநர்களுக்கு இருக்கிறது.

“கதைத்திருட்டை தடுக்க என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?”

”எதிர்காலத்தில் கதை திருட்டுகள் நடக்காமலிருக்க ஒரு ஏற்பாட்டைச் செய்யலாம். ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி, ஒரு பிரபல எழுத்தாளர், ஒரு சினிமா இயக்குநர், பொதுமக்களில் ஒருவர், ஒரு பத்திரிகை ஆசிரியர் கொண்ட ஐவர் கமிட்டியை நிரந்தரமாக தமிழ்நாடு திரைப்படசங்கம் நிறுவ வேண்டும்.  கதை திருட்டு புகார்கள் வந்தால் இருதரப்பையும் கூட்டி விசாரித்து தகுந்த நியாயம் வழங்க வேண்டும். கதை திருட்டு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தபட்ட இயக்குநர் ஐந்து வருடங்களுக்கு எந்த படமும் எடுக்ககூடாது என்று தடை விதிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்கி டைட்டிலில் பெயர் இடம் பெற ஆவண செய்யண்டும்!”

ஆர்னிகா நாசர்

“ஆனால் சிலர் பொய்யாகக்கூட, இயக்குநர்கள் மீது புகார் கொடுக்க வாய்ப்பு இருக்கிறதே!”

“அதையும் சொல்கிறேன்.  பொய்ப்புகார் கொண்டு வரும் வாதிக்கும் தகுந்த அபராதம் விதிக்க வேண்டும்!”

“தங்கள் ஆதங்கம் புரிகிறது. நீங்கள் “பற” என்கிற சிறுகதையை காப்பி அடித்துத்தான் 2.o படத்தில் அக்சய் குமார் நடித்த பட்சிராஜன் கதாபாத்திரத்தை ஷங்கர் உருவாக்கியிருக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறீர்கள். அந்தக் கதையை கூற முடியுமா?”

“அப்படியே தருகிறேன்… பிரசுரியுங்கள்..!

ஆர்னிகா நாசர் பேட்டயின் முதல் பாகம் கீழே..

https://patrikai.com/exclusive-2-o-controversy-shankar-has-stolen-my-story-famous-writer-arnika-nasser-complaint/?fbclid=IwAR3jkha1DEZGuHQgZdqFK3E4LKhUjYpzs6u4rcl7rapFR-OxM1Us3ems1b8

@ 2.0  படத்தின் பட்சிராஜன் கதாபாத்திரத்துக்கு முன்னோடி தனது ஆர்னிகா நாசர் கூறும் அவரது “பற” சிறுகதை விரைவில்  patrikai.com இதழில் வெளியாகும்..

 

#Rajini # Aishwarya  #amous #writer #complains #story #arinikanasar #vairajavai @stolen 

கார்ட்டூன் கேலரி