தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. மேலும், கல்விக் கூடங்கள், திரையரங்குகள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன.

மேலும் படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஃபெப்சி தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

திரைப்படத் தொழிலாளர்களின் நிலை குறித்து, அவர்களுக்கு உதவ நடிகர் – நடிகைகள் என அனைவரும் முன்வர வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை வெளியானவுடனே முதல் நபராக சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 10 லட்ச ரூபாய் பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கினர்.

அவர்களைத் தொடர்ந்து பார்த்திபன் 250 மூட்டை அரசி வழங்கியுள்ளார். ஒவ்வொன்றுமே 25 கிலோ எடை கொண்டதாகும். நடிகர் மற்றும் இயக்குநர் மனோ பாலா 10 மூட்டை அரிசி வழங்கியுள்ளார். அனைத்துமே 25 கிலோ எடை கொண்டதாகும்.

இவர்களைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ஃபெப்சிஅமைப்புக்கு 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதியும் தன் பங்கிற்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பெப்சி தொழிலாளர்களுக்காக 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.