தமிழ்நாடு வெதர்மேனை தாறுமாறாக விமர்சிக்கும் ரஜினி ரசிகர்கள்

சென்னை

ஜினிகாந்த் வீடியோவில் இருந்த தவற்றைச் சுட்டிக்காட்டிய தமிழ்நாடு வெதர்மேனை ரஜினி  ரசிகர்கள் கண்டபடி விமர்சித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் குறித்து நேற்று நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் ஒரு வீடியோ பதிந்திருந்தார். அதில் அவர் கொரோனா வைரஸ் 12 மணி நேரம் வரையில் மட்டும் உயிருடன் இருக்கும் என்பதால் இன்று அனைவரும் மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

கொரோனா வைரஸ் குறித்து அவர் அளித்துள்ள தகவல் தவறானது என்பதால் அவருடைய வீடியோ டிவிட்டரில் இருந்து நீக்கப்பட்டது.  இந்த தவற்றைச் சுட்டிக் காட்டி தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான் டிவிட்டரில் பதிவு ஒன்றை இட்டிருந்தார்.   இவருடைய வானிலை பதிவுகள் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவைப் பெற்றுள்ளன.

ரஜினிகாந்த் தவறு குறித்து இவர் இட்டிருந்த பதிவு ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் கோபத்தை அளித்துள்ளது.  அவரது பதிவில் இவரைப பற்றியும் இவருடைய மதத்தை குறிப்பிட்டும் கடும் விமர்சனங்கள் இடப்பட்டுள்ளன.  ரஜினி ரசிகர்கள் நடவடிக்கை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் மற்றொரு பதிவு இட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர்,

“தவறு என்பது தவறு தான் என்பதைப் பதிவிட்டதற்கு என்னை திமுகவைச் சேர்ந்தவர் எனவும் எனது மதத்தைக் குறித்தும் பலர் திட்டி உள்ளனர்.  ஒரு சில ரஜினி ரசிகர்களுக்குத் திட்ட மட்டுமே தெரியும் எனத் தோன்றுகிறது.   முதலில் ரஜினி தனது ரசிகர்களுக்குச் சகிப்புத் தன்மை என்றால் என்ன என்பதைக் கற்பிக்க வேண்டும்.  அவர் செய்வாரா?  அவருக்கு ரசிகர்கள் நன்மையை விட தீமையே அதிகம் செய்கின்றனர்”

எனப் பதிந்துள்ளார்.