சென்னை:
டிகர் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகி இருக்கப் போவதாக தெளிவாகத் தெரிவித்த பின்பும் அவரது ரசிகர்கள் சிலர் இன்னும் நம்பிக்கை இழக்காமல், சமூக வலைத்தளங்களில்… அவரை விரைவில் அரசியலில் இணையுமாறு கேட்டு வருகின்றனர்.

“நாங்கள் ரஜினியை ஆதரிக்கிறோம்” என்ற தலைப்பில் சமூக வலைத்தளத்தில் வீடியோக்கள் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாகவும் தன்னுடைய உடல்நிலை காரணமாகவும் அரசியலில் தற்போது இணைய வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ரஜினிகாந்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவரும் ரசிகர்கள், நடிகர் ரஜினிகாந்த் ஒருவரால் மட்டுமே தமிழக அரசியலை மாற்ற முடியும் என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர், இந்த பதிவை நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ரீ டுவிட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில ரசிகர்கள் நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவாக சுவரொட்டிகளை வெளியிட்டு விரைவில் அரசியலுக்கு வருமாறு கேட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இருக்கும் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ஒருவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக உறுதியாக தெரிவித்தார், ஆனால் உடல்நிலை காரணமாக தற்போது அரசியலில் இணைய முடியாது என்று தெரிவித்துள்ளார், இது மாறும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் “வீ சப்போர்ட் ரஜினி” என்ற வீடியோக்கள் வெளிநாட்டில் வசிக்கும் ரஜினி ரசிகர்களால் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.