“அருவி” குழுவினருக்கு ரஜினி தங்க செயின்

’அருவி’ திரைப்படக் குழுவை   நேரில் அழைத்து பாராட்டிப் நடிகர் ரஜினி காந்த், தங்க செயின் பரிசளித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான அருவி திரைப்படம் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. “தரமான படம்” என்று நெட்டிசன்கள் புகழந்து தள்ளுகிறார்கள்.

இந்த நிலையில், அருவி பட இயக்குநர் அருண்பிரபுவை தொடர்புகொண்டு நடிகர் ரஜினி பாராட்டு தெரிவித்தார். அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து அருண்பிரபு, தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, நாயகி அதீதிபாலன் உள்ளிட்ட அருவி குழுவினர் ரஜினியை சந்தித்தனர். அவர்களிடம், அருவி திரைப்படம் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கிறது என்று ரஜினி பாராட்டினார்.

மேலும் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் ’இதற்கு என்ன படங்களையெல்லாம் தயாரித்திருக்கிறீர்’ என்று கேட்க, அதற்கு பிரபு, “தேசிய விருது பெற்ற ஜோக்கர் மற்றும் மாநகரம் , தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களைத் தயாரித்திருக்கிறேன்” என்றார்.

அதற்கு ரஜினி ”நீங்கள் தயாரித்த அனைத்து படங்களையும் பார்த்துவிட்டேன். எல்லாமே அருமையான படங்கள். தொடர்ந்து இதே போன்ற படங்களைத்  தயாரியுங்கள்” என்று உற்சாகப்படுத்தினார்.

அடுத்து இயக்குநர் அருண்பிரபுவிடம், “அருவி மிகவும் சிறந்தபடம்.  சில காட்சிகளைப் பார்த்து அழுதேன்.. வேறு சில காட்சிகளைப் பார்த்து சிரித்தேன். அந்த அளவுக்கு மனதில் நுழைந்துவிட்டது அருவி.

இந்தப் படத்தை அளித்ததற்காக எங்களைப் போன்ற மக்கள் உங்களுக்குக் கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்” என்று பாராட்டினார்.

இறுதியாக படக்குழுவினருக்கு தங்க செயின் பரிசளித்தார் ரஜினி.

இதனால் அருவி படக்குழு, உற்சாக அருவியில் திளைத்து நிற்கிறது.