ரஜினி தமிழர்கள்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார்: நடிகர் ஆனந்தராஜ்

சென்னை:

முன்னாள் அதிமுக நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவரான நடிகர் ஆனந்தராஜ் இன்று காலை திடீரென போயஸ் கார்டனில் உள்ள ரஜினி இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.

இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரஜினியை சந்தித்து வெளியே வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ரஜினியின் அரசியல் குறித்து பதில் அளித்தார். தமிழகத்தில் இருந்து ரஜினியை பிரித்து பார்ப்பது தவறானது என்று கூறினார்.

மேலும்,  தமிழகம் மீதும், தமிழ் மக்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவராக ரஜினி உள்ளார் என்றும் கூறினார்.

ஜெ.மறைவை தொடர்ந்து,  அ திமுகவில் இருந்து விலகுவதாக கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 28 தேதி அறிவித்த  அதிமுக நட்சத்திர பேச்சாளரான நடிகர் ஆனந்தராஜ், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவை வழி நடத்தி செல்ல சரியான தலைவர்கள் இல்லாத நிலையில் சசிகலா அந்த பொறுப்புக்கு வர முயற்சித்து வருகிறார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், தற்போதைய  அதிமுக அரசு மீதும், தலைவர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.