ரஜினி, கமல் பார்ட் டைம் அரசியல்வாதிகளே!: நடிகர் கார்திக்

தான் பார்ட் டைம் அரசியல்வாதியாக இருப்பதாக கூறிய நடிகர் கார்த்திக், ரஜினி கமல் ஆகியோரும் பார்ட் டைம் அரசியல்வாதிகளே என்று அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசியலுக்கு காமெடி காட்சிகளை அளிப்பவர்களில் முக்கியமானவர் நடிகர் கார்த்திக். பொதுக்கூட்டத்துக்கு வருவதாகக் கூறிவிட்டு ஓட்டல் அறையிலேயே “தூங்கி”விடுவார். “என்னைப் பார்த்து பெரிய கட்சிகள் எல்லாம் பயப்படுகின்றன” என்று சொல்லி சிரிக்க வைப்பார்.

ரஜினி கமல்

இவர் செய்ததிலேயே உச்சகட்ட காமெடி.. தனிக்கட்சி துவங்கி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டதுதான். இதில் என்ன காமெடி என்கிறீர்களா?

இல்லாத தொகுதிகளுக்கெல்லாம் வேட்பாளர்களை அறிவித்தார்.

சமீபகாலமாக அரசியலில் இருந்து “ஒதுங்கி” (!) இருந்த கார்த்திக், நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “நான் இதுவரை முழு நேர அரசியல்வாதியாக இருந்ததில்லை. பார்ட் டைம் அரசியல்வாதியாகவே இருந்திருக்கிறேன். அதிலும் சமீபத்தில் அரசியலை விட்டு விலகி நிற்கிறேன். இனி முழு நேர அரசியல்வாதி ஆவேன்” என்றவர், அடுத்து சொன்னதுதான் அதிரடி ரகம்.

கார்த்திக்

 

“நான் மட்டுமல்ல..ரஜினி கமலும் பார்ட் டைம் அரசியல்வாதியாகத்தான் இருக்கிறார்கள். அவர்களும் முழு நேர அரசியல்வாதியாக வேண்டும். அவர்களும் சினிமாவில் நடிப்பதை விட்டு, முழு நேர அரசியல் செய்ய வரவேண்டும்” என்றார்.

தொடர்ந்து, “ நானும் விரைவில் முழு நேர அரசியல்வாதியாக  எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகிறது” என்றார்.

“கார்த்திக். சரணாலயம்” என்ற அமைப்பை இவர் துவங்கியபோது கூடிய கூட்டம் பெரிய கட்சிகளையே கதிகலங்க வைத்தது நிஜம்.

ஆனால் அவரது “காமெடி” நடவடிக்கைகளால் அவருடன் இருந்த கூட்டம் காணாமல் போனது. பிறகு பார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்தார். அங்கும் தனது கோக்குமாக்குகலை இவர் காண்பிக்க.. கட்சியில் குழப்பம். பிறகு அதிரடியாக நீக்கப்பட்டார். அடுத்து, “நாடாளும் மக்கள் கட்சி”யை துவங்கினார். அப்போதுதான் இல்லாத சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து ஆச்சரியமூட்டினார்.

இப்போது முழு நேர அரசியல்வாதி ஆகப்போகிறாராம்..முழு நேர எண்டர்டெய்ண்மெண்ட் நிச்சயம்!