சென்னை:

ன்மிக அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், இன்று ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச்செயலாளர்கள் கூட்டம்நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும் ரஜினி, புதியதாக தொடங்க உள்ள கட்சி மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து காணொளி காட்சி மூலம் விவாதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2017ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி தன்னு தனது ரசிகர்கள் மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது, அரசியலுக்கு வரப்போவ தாக அறிவித்தார்.  அப்போது, எனது அரசியல் பிரவேசம் பற்றி ரொம்ப பில்ட் அப் ஆகிவிட்டது. அதுக்கு நான் காரணம் அல்ல. தானா பில்ட் அப் ஆகிவிட்டது. எனக்கு அரசியல் குறித்து பயம் இல்லை. மீடியாவைப் பார்த்துத்தான் பயம். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் மீடியா பார்த்து பயப்படுகிறார்கள். நான் குழந்தை. கண்ணன அர்ஜூனனிடம், “உன் கடமையை செய். யுத்தம் செய். வெற்றி அல்லது வீரமரணம். யுத்தம் செய்யாவிட்டால் கோழை என்பார்கள்.

இதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன்.  நான் அரசியலுக்கு வருவது உறுதி.  இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டமன்றத் தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து, போட்டியிடுவேன். தமிழ்நாடு முழுதும் 234 தொகுதியிலும் போட்டியிடுவோம்.

இது பதவிக்காக அல்ல. அப்படி இருந்தால் 1996லேயே வந்திருப்பேன். நாடு கெட்டுப்போய்விட்டது.. ஜனநாயகம் கெட்டுப்போய்விட்டது. சமீப காலமாக நடந்த பல சம்பவங்கள் தமிழக மக்களை தலை குனிய வைத்துவிட்டது. எல்லா மாநில மக்களும் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள். இந்த நேரத்தில் நான் முடிவெடுக்கவில்லை என்றால், தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். எனக்கும் குற்ற உணர்வு துரத்தும்.

எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது. சிஸ்டம் மாத்தணும். உண்மையான நாணயமான வெளிப்டையான சாதி மத வேறுபாடு இல்லாத ஆன்மிக அரசியல் கொண்டுவருவேன்” என்று ரஜினி பேசி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, ரஜினி ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி மன்றத்திற்கு ‌38 மாவட்ட நிர்வாகிகளையும் நியமித்தார்.  அதோடு சரி… கட்சிப்பணிகள் முடங்கி மீண்டும் படம் நடிப்பதில் பிசியாகி விட்டார். இதனால் அவரது அரசியல் வருகை கேள்விக்குறியானது.

இந்த நிலையில், கடந்த சில நாட்ளாக மத்திய மாநில அரசியல் நிலவரங்கள் குறித்து விமர்சித்து வருகிறார். இதனால், சமுக வலைதளங்களில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

இந்த நிலையில், இன்று மீண்டும் தனது மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். மாவட்டச் செயலாளர்கள் 38 பேரும் சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளனர். இவர்களிடம் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் காணொலிக்காட்சி மூலம் ரஜினிகாந்த் பேச ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டில், அரசியல் கட்சி தொடங்கி, 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவோம் என  அறிவித்த ரஜினிகாந்த், இன்றைய கூட்டத்தில் அதுகுறித்து பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினி என்னப் பேசப்போகிறார் இன்று பிற்பகல் தெரிய வரும்… அவரது ஆலோசனை அரசியல் குறித்தா அல்லது எப்போதும் போல விரைவில் வெளியாக இருக்கும் அண்ணாத்த படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கிலான சந்திப்பா என்பது சில மணி நேரத்தில் தெரிய வரும்…

ரஜினி மாவட்டச்செயலாளர்களை நேரில் சந்திக்காமல், காணொளி காட்சி மூலம் சந்திக்க உள்ளதாக வெளியாகும் தகவல்கள் அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.