Random image

ரஜினியின் புத்தாண்டு செய்தி: அரசியலை மீண்டும் ஒத்திவைத்தார்!

டி.வி.எஸ். சோமு பக்கம்:

டிகர் ரஜினிகாந்த், தனிக்கட்சி அமைக்கப்போவதாகவும், 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளார். ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் வெடி வெடித்துக் கொண்டாடுகிறார்கள்.. தொலைக்காட்சிகளிலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஆனால் ரஜினியின் அந்த பேச்சினை கூர்ந்து கவனிக்கும் போது அவர் மீண்டும் தனது அரசியல் பிரவேசத்தை தள்ளி வைத்திருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.

வழக்கம்போல், “சிஸ்டம் கெட்டுவிட்டது.. சரி செய்ய வேண்டும்” என்று தெரிவித்த ரஜினி, ஆட்சிக்கு வந்ததும் கட்சிகள் மக்களை கொள்ளையடிக்கின்றன என்று அனைத்துக் கட்சிகளையும் கடுமையாக தாக்கினார்.

அதன் பிறகு அவர் கூறியதுதான் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது:

“சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக சரியான நேரத்தில் கட்சி குறித்து அறிவிக்கப்படும். அதுவரை ரசிகர் மன்றங்களை பலப்டுத்த வேண்டும். உங்களைச் சுற்றி இருக்கும் தாய்மார்கள், இளைஞர்கள் அனைவரையும் மன்றத்தில் சேருங்கள்.

மன்றங்களை பலப்படுத்தும் வரை மன்றத்தினர் யாரும் அரசியல் பேச வேண்டாம்.. எந்தவொரு அரசியல்வாதியையும் விமர்சிக்க வேண்டாம். நானும் விமர்சிக்க மாட்டேன்” என்பதுதான்.

அரசியல் என்பதின் பாலபாடமே.. . அரசியல் சூழலை, நடப்புகளை விமர்சிப்பதும் தமது கருத்துக்களைச் சொல்வதும்தான்.

ஆனால் விமர்சனமே இல்லாத அரசியல் என்பதை ரஜினி அறிமுகப்படுத்துகிறார்.

ஆக..2021 மே மாதம் வர இருக்கும் சட்டமன்ற தேர்தல் வரை.. இன்னும் குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் அரசியலை ஒத்திவைத்திருக்கிறார்.

அதற்குள் அவரது 2.0, காலா ஆகிய படங்கள் வெளியாகிவிடும். கபாலி உட்பட அவரது மற்ற படங்களைப்போலவே திரையரங்க சீட்டுக்கள், உரிய கட்டணத்தைவிட மிக அதிக விலையில் விற்கப்படும்.

“ரஜினி எந்தப் பக்கம் சாய்வாரோ” என்ற சந்தேகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள்.. குறிப்பாக ஆளும் தரப்பு இந்த விலையேற்ற விற்பனையை கண்டுகொள்ளாது.

பல நூறுகோடி ரூபாய் திட்டங்களான அந்த இரு படங்களும் வசூலை அள்ளும். இதுதான் ரஜினியின் திட்டம் என்று புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

இன்னொரு விசயம்.

“உங்களைச் சுற்றி இருக்கும் தாய்மார்கள் இளைஞர்கள் உட்பட அனைவரையும் மன்றத்தல் சேருங்கள்” என்று ரசிகர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார் ரஜினி.

அவர்கள் என்ன சொல்லி, மன்றத்தில் பொதுமக்களை இணைப்பார்கள்?

அரசியல் நோக்கத்துடன் மக்களை இணைக்கவேண்டிய கட்டாயத்தில் ரசிகர்கள் என்ன  சொல்வார்கள்?

இதுவரை அரசியல் ரீதியாக ரஜினி கூறியவற்றை கைவிரல் எண்ணிக்கையில் அடக்கிவிடலாம். அவையும்கூட எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் எடுத்துக்கொள்ளும் வகையிலேயே இருந்திருக்கின்றன.

மற்றபடி அவரது திரைப்பட நடிப்பை வைத்துத்தான் ரசிகர்கள், அவரை தமிழக முதல்வராக்கிப் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.

அப்படியானால், “ரஜினி என்ன அழகாக சிகரெட்டை தூக்கிப் பிடித்துப் போடுவார்.. நாயகி நிர்வாணமாக குளியலறையில் இருந்ததைப் பார்த்து கடவளே.. கடவுளே என்று ஆன்மீக அரசியல் வசனம் பேசினாரே.. ஆகவே மன்றத்தில் சேருங்கள்..” என்று மக்களிடம் கூறப்போகிறார்களா?

எந்தவொரு கொள்கைத் திட்டமும் இன்றி மக்களை மன்றத்தில் சேருங்கள் என்பது, ஜனநாயக முறைக்கு ஏற்புடையது அல்ல. பொதுமக்களையும், கண்மூடித்தனமான ரசிகர் கூட்டமாக ஆக்கும் தவறான முயற்சியே இது.

இது எப்படி ஜனநாயகமாகும்?

கட்சிக் கொள்கை என்னவென்றால்,  “நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்” என்பதைப்போன்றவற்றையும், “உண்மை உழைப்பு உயர்வு” என்பதையெல்லாம் கட்சிக்கொள்கைகள் என்கிறார்.

இவை, முழக்கங்களே.. கொள்கை என்பது, “தனியார் மயத்தை ஆதரிக்கிறோமா.. எதிர்க்கிறோமா.. அல்லது குறிப்பிட்ட அளவு ஏற்கிறோமா” என்பது போன்றவைதான். இவைதான் மக்களுக்குத் தேவை.

22 வருடங்களாக அரசியலுக்கு வருவாதக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருபவர்.. அரசியல் குறித்து முக்கிய கட்சி பிரமுகர்கள், ஊடகவியலாளர்களில் ஆரம்பித்து நடிகை கஸ்தூரி வரை விவாதம் நடத்தியவர்.. கட்சிக் கொள்கைகள் என்று பத்து விசயங்களைக் கூட அறிவிக்க முடியவில்லையா?

கொள்கைகளைக் கூறிவரும் மற்றபல கட்சிகள் அதன்படி நடக்கின்றனவா என்று கேட்கலாம்.

அப்படி உறுதியாகக் கூற முடியாதுதான். .  அதற்காக, “சாலை விதிகளை பெரும்பாலோர் மதிப்பதில்லை. ஆகவே சாலை விதிகளை நீக்கவிடலாம்” என்று சொல்லாமா?

மீண்டும் முதல் விசயத்துக்கு வருவோம்.

மன்றத்தை பலப்படத்தும் வரை அரசியல் பேச வேண்டாம் என்றால், அதற்குக் குறிப்பிட்ட காலக்கெடுவாவது சொல்லியிருக்க வேண்டும். அதுவும் இல்லை.

அதேபோல இத்தனை வருட அரசியல் ஆராய்ச்சிக்குப் பிறகு தனது கட்சிக்கு ஒருபெயர் கூட வைக்கமுடியவில்லையா..  மன்றம் மன்றம் என்றுதானே சொல்கிறார்!

அடுத்து…

பிற மாநில மக்கள் தமிழக மக்களைப் பார்த்து சிரிக்கிறார்கள். இனியாவது இந்நிலையைப் போக்காவிட்டால் நாளைய தமிழகம் மன்னிக்காது என்று கூறியிருக்கிறார் ரஜினி.

தமிழ்.. தமிழர் என்று பேசினாலும்  அவர் ஒரு அதி தீவிர இந்தியர் என்பது அனைவருக்கும் தெரியும்.

சாதாரண நடிகர் சங்கத்து தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று வைக்க வேண்டும் என்ற ரஜினி, உண்மையில் “இந்தியன்” (பார்ட் டூ பார்ட் த்ரி.. எக்ஸட்ரா) தான்.

இதைத்  தவிர தமிழகத்தை பாதித்த எந்தவொரு பிரச்சினை குறித்தும் அவர் கவலைப்பட்டு குறைந்பட்சம் அறிக்கைகூட விட்டதில்லை. அது, இலங்கை படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவாதகட்டும் சமீபத்திய குமரி புயல் பாதிப்பாகட்டும், சென்னை வெள்ளமாகட்டும் கனத்த மவுனம்தான் அவரிடமிருந்து வெளிப்படும். ( “கன்னடரான ரஜினி காவிரி பிரச்சினையில் கருத்து சொல்வதே இல்லை” என்ற விமர்சனம் எழுந்த பிறகு, காவிரியில் தமிழக உரிமை வேண்டும் என்று சில வார்த்தைகள் பேசியதோடு உண்ணாவிரதம் இருந்தார் நதி நீர் இணைப்புக்கு ஒரு கோடி அளிப்பதாக அறிவித்தார். அவ்வளவே. இது போன்ற சில விதிவிலக்குகள் இருக்கலாம்.)

அதே நேரம், உயர் மதிப்பு பண நோட்டுகள் தடை என்று பிரதமர் மோடி அறிவித்தபோதும், ஜி.எஸ்.டி. வரியைக் கொண்டு வந்தபோது, உடனடியாக “புதிய இந்தியா பிறந்தது” என்று வாழ்த்து தெரிவித்தார்.

ஆக, “தமிழக நலன்” (!) என்பதைவிட ஒட்டுமொத்த “இந்திய நலன்” (!) என்பதுதான்  ரஜினியின் நோக்கம். (மேற்கண்ட இரு நடவடிகைக்களால் இந்தியா பலனடைந்ததா என்பது வேறு விசயம்.)

ஆக இந்திய நலனில் அக்கறை கொண்ட ரஜினி, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான பிரச்சினைகள் குறித்து கவலைப்பட்டு பேசியிருக்க வேண்டும். தமிழகத்தைப் பார்த்து பிற மாநிலத்தவர் சிரிக்கிறார்கள் என்றால் நோட்டு தடை, மாட்டுக்காக கொலை என்பது போன்ற பிரச்சினைகளால் பிற நாட்டு மக்கள் இந்தியாவை இகழ்கிறார்களே.. அது குறித்தெல்லாம் தானே முக்கியமாக ரஜினி கவலைப்பட வேண்டும்.

ஆனால் அவை குறித்து ரஜினி பேசவில்லை. ஆக மத்திய ஆட்சியாளர்களை எதிர்க்க – விமர்சிக்க அவர் விரும்பவில்லை.

இன்னொரு பக்கம் தமிழக கட்சிகளையம் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. அதற்காகத்தான் இன்னும் சில வருடங்களுக்கு விமர்சனம் வேண்டாம் என்றது.

ஆக.. ஆக, ஏற்கெனவே நான் சொன்னத போல..

“எப்போ அரசியலுக்கு வர்றீங்க..” என்கிற ஆபத்தான கேள்வியிலிருந்து இன்னும் குறைந்தது மூன்று ஆண்டுகள்  தப்பியிருக்கிறார் ரஜினி.

அவரது 2.0 மற்றும் காலா படங்கள் வெற்றியடையவும், அடுத்து அறிவிக்க இருக்கும் படமும் வெற்றியடையவும் வாழ்த்துகள்!

பின்குறிப்பு:

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை நம்ப வேண்டும் என்றால்.. சிஸ்டம் சரி செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறுவது உண்மையாக இருந்தால், தமிழக்ததைப் பார்த்து பிற மாநிலத்தவர் சிரிப்பது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்துவது உண்மை என்றால்..

வெளிவர இருக்கும் அவரது இரு படங்களுக்கு அநியாயமாக பல மடங்கு சீட்டு கட்டணத்தை உயரத்தி விற்காமல் சட்டத்திற்கு உட்பட்டு உரிய விலையில் விற்பதை உறுதி செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால்..

தான் பல்லாண்டுகாலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் திரைத்துறையில். குறிப்பாக தானே தீர்மானித்து செயல்படுத்தும் தனது படங்களிலேயே சிஸ்டத்தை சரி செய்ய முடியாதவர் மொத்த சிஸ்டத்தையும் சரி செய்வார் என்பதை  எப்படி நம்புவது?