“மக்கள் மன்ற” தலைமை அலுவலகத்தை மூட ரஜினிகாந்த் உத்தரவு?

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மீது தொடர்ந்து புகார் குவிந்து வருவதை அடுத்து, தனது கட்சி அலுவலகத்தை இழுத்து மூட நடிகர் ரஜினிகாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளவர். அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக கோரிவந்தனர்.

ஆனால் 1996ம் ஆண்டைய சட்டமன்றத் தேர்தலில் இருந்து அடுத்தடுத்து வந்த தேர்தல்கள் சிலவற்றின்போது வாய்ஸ் கொடுத்ததோடு  ஒதுங்கிக்கொண்டார்.

 

 

இந்த நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு கடந்த (2017ம்) ஆண்டு டிசம்பர் மாதம், தான் அரசியலுக்கு வருவதாக ரஜினி அறிவித்தார். ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை தான் நிரப்ப வந்ததாக கூறினார்.

இதைத்தொடர்ந்து அரசியல் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரைச் சந்தித்து ஆலோசனை செய்துவந்தார். தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக அறிவித்த அவர், உறுப்பினர்களை சேர்க்கும்படி ரசிகர்களுக்கு உத்தரவிட்டார்.

இதுவரை தனது கட்சியின் பெயர், கொடி, சின்னம் எதையும்  ரஜினி அறிவிக்கவில்லை. போர் (தேர்தல்) வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றார். அதே நேரம், முக்கிய நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்தார். அவை பல சர்ச்சைகளைக் கிளப்பின.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி நியமனத்தில் ஏகப்பட்ட கருத்துவேறுபாடுகல் மன்றத்துக்குள் எழுந்தன. உதாரணமாக தூத்துக்குடி மாவட்டத்துக்கு, குற்றப்பின்னணி உள்ள ஒருவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

வேறு சில மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை எதிர்த்து அம்மாவட்ட ரசிகர்களே எதிர்ப்பு தெரிவித்ததும் நடந்தது. இந்த நிலையில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து புகார்களை அனுப்பி வந்தனர்.

ஆகவே மன்ற பொறுப்பாளராக இருந்த சுதாகரை சற்று ஒதுங்கியிருக்கச் சொல்லிவிட்டு, முன்னாள் தலைவர் சத்திய நாராயணாவை மீண்டும் அழைத்து பொறுப்பை ஒப்படைக்கலாம் என்ற முடிவுக்கு ரஜினி வந்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் புதிய திரைப்பட படப்பிடிப்பில் கலந்துகொள்ல ரஜினி வடமாநிலத்திற்கு சென்றுள்ளார்.

ரஜினியின் மக்கள் மன்றத்திற்கான தலைமை அலுவலகம் ரஜினிக்கு சொந்தமான சென்னை  ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனியாக செயல்பட்டு வருகிறது.  இங்கிருந்துதான் மாநில நிர்வாகிகள் இயங்கிவருகிறார்கள்.

இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தில் நிர்வாகிகள் நியமனம், நீக்கம் போன்றவை குறித்து நிறைய புகார்கள் ரஜினிக்கு சென்றவண்ணம் இருந்தன. இதையடுத்து அதிருப்தியான ரஜினி, ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இயங்கி வந்த தலைமை அலுவலகத்தை மூட உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.