ஜினியின் அரசியல் அறிவிப்பு தமிழக அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதை யாரும் மறுக்கவோ,  மறைக்கவோ முடியாது. ஆனால், இது பாஜகவின் தேர்தல் வியூகமா அல்லது அதிமுகவுக்கு அடிக்கப்போகும் சாவுமணியா என்பதைக்காண இன்னும் 6 மாதங்கள் பொறுத்திருக்க வேண்டியதும் அவசியம்..

அரசியல் கட்சித்தொடங்கப்போவதாக கடந்த சில ஆண்டுகளாக  கூறி வந்த ரஜினி, தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஜனவரியில் புதிய கட்சி தொடங்கப் போவதாக தெரிவித்துள்ள ரஜினி, திரையில் பேசுவதைப்போல பல  ‘பஞ்ச்’ டயலாக்குகளையும் பேசி கைதட்டல் பெற்றுள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்று தமிழகஅரசியல் கட்சிகள் நம்பிக்கொண்டிருந்த  நிலையில், அவரது திடீர் அரசியல் கட்சி அறிவிப்பு தமிழக அரசியல்கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பது கண்கூடாக தெரிகிறது.

பாஜகமீது சாஃப்ட் கார்னர் உள்ள ரஜினி, கடந்தவாரம் அமித்ஷா சென்னை வந்தபோது சந்திக்க மறுத்துவிட்டதாக செய்திகள் வந்தன. ஆனால், அவர்கள் இருவரும் இடையே மீடியேட்டராக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி செயல்பட்டு வருவதும் அனைவருக்கும் தெரியும். பாஜகவின் அரசியல் வியூகங்களுக்கு  ரஜினியை பயன்படுத்த காய்கள் நகர்த்தப்பட்டு வருவதாகவும் , ரகசிய பேச்சுக்கள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் பரவின.

இந்த நிலையில்,  ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும், டிசம்பர் 31ம் தேதி இதுபற்றி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார். ரஜினிகாந்த்தின் அரசியல் அறிவிப்பு அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினி அரசியல் கட்சியை தொடங்குவார் என உறுதியாக நம்பியவர்களில் பாஜகவினரும் உண்டு. தற்போது, அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவே ரஜினி, அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இதனால், வரஇருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் ரஜினி, பாஜகவுடன் கைகோர்ப்பார் என்றே கூறப்படுகிறது. இதற்காகவே பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள அர்ஜுன மூர்த்தி, ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இது பாஜகவின் அரசியல் வியூகத்தில் முதல்படி என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

ரஜினியின் அறிவிப்பு பாஜகவிற்கு மகிழ்ச்சியை தந்துள்ளதாக கூறப்படும் நிலையில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் முதல்ஆளாக ரஜினியின் அறிவிப்புக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதுடன், ரஜினி கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக என பல கட்சிகள் உள்ள நிலையில், ரஜினியின் கட்சியும் இணைந்தால் அதிமுக போட்டியிடும் தொகுதிகள் வெகுவாக குறைந்துவிடும், இதனால் தேர்தலில் வெற்றிபெற்றாலும், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியுமா? என்பதும் கேள்விக்குறியே. ஆட்சியில் இடம்பெற துடித்துக்கொண்டிருக்கும் பாஜகவுக்கு, அதிமுகவில் இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டால் மகிழ்ச்சிதானே…

ஒருவேளை ரஜினி அதிமுக உடன் கூட்டணி வைத்தால், அவருக்கு எத்னை தொகுதிகளை அதிமுகவால் கொடுக்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. ஏற்கனவே பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் அதிமுகவுடன் அதிக தொகுதிகளை கேட்டு டார்ச்சர் செய்துவரும் நிலையில், அவர்களுக்கான தொகுதிகளை ரஜினி கட்சிக்கு வழங்கி, அவரை தங்களது கூட்டணியில் சேர்த்துக்கொள்ள அதிமுக முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அவருக்கு துணை முதல்வர் பதவியை அதிமுக தர வாய்ப்பு உள்ளது.

ஆனால், ரஜினி ரசிகர்கள், அவர் முதல்வராக வேண்டும் என எதிர்பார்ப்பதால், அதிமுகவுடன் கூட்டணி ஏற்படுமா? என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

தற்போதைய தமிழகஅரசியல் சூழல், அதிமுக திமுகவுக்கு இடையே கடுமையான போட்டிகளை ஏற்படுத்தி வருகிறது. திமுக ஆட்சியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற உத்வேகத்துடன் பணியாற்றி வருகிறது. அதிமுக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பணியாற்றி வருகிறது.  திமுகவுக்கு டஃப் கொடுக்கும் வகையில், அதிமுக அதிரடியாக செயல்பட்டு வருகிறது.

ஆனால், பாஜகவின் நினைப்போ வேறுவகையாக உள்ளது. இதுவரை தமிழகத்தில் காலூன்ற முடியாத பாஜக, இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சில இடங்களையாவது கைப்பற்றி, தமிழகத்தில் தாமரை மலர வேண்டும் என்னும் நோக்கத்தில் களமிறங்கி உள்ளது. அதற்காக எந்தவிலை கொடுக்கவும் தயாராகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள  இருபெரும் திராவிட கட்சிகளுக்கு என தனியாக வாக்கு வங்கி உள்ளதால், அதை சீர்குலைக்கும் வேளையில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. போட்யிடும் வேட்பாளர்கள் யார் என்று பார்க்காமல், கருணாநிதி, எம்ஜிஆர் மீதான தாக்கத்தின் காரணமாக, உதயசூரியனுக்கும், இரட்டை இலைக்கும் தங்களது வாக்குகளை செலுத்தும் தீவிரத் தொண்டர்கள் இன்றளவும் இருந்து வருகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை நெருங்க முடியாத பாஜக, அதிமுகவில் நிலவும் உறுதியான தலைமையின்மையை பயன்படுத்தி, அதிமுகவின் வாக்கு வங்கிகளை திசைதிருப்ப முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்கான அச்சாரம்தான், பாஜகவின் வேல்யாத்திரை. தமிழ்க்கடவுள் முருகன் பெயரைக்கொண்டு, தமிழக மக்களின் மனதில் தாமரை பதிய வைக்கும் நோக்கத்தில், பாஜக மேற்கொண்ட யாத்திரைக்கு, கூட்டணி கட்சியான ஆளும் அதிமுக அரசும் தடை போட்டுள்ளது. இது பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக, ரஜினியை வைத்து, தமிழக அரசியலில் பாரதியஜனதா கட்சி ஆட்டத்தை தொடங்கி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். சிறை வாசத்தில் இருந்து சசிகலாவை விடுதலை செய்வதுடன், அவர்மூலம் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக தலைமை முனைப்பு காட்டி வருகிறது. (ஏற்கனவே டிடிவி தினகரன் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது)  சசிகலா விடுதலையானதும், அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்பதை மறுப்பதற்கில்லை.  இதை பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்தும் என நம்பப்படுகிறது.

தற்போதைய அதிமுக அமைச்சர்கள் ஓஎஸ்மணியன், ராஜேந்திரபாலாஜி என பலரும் எம்எல்ஏக்களில் பலரும், இன்னும் சசிகலாவைத்தான் தங்களது தலைவியாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அதுபோல, முதல்வர் எடப்பாடியும், இதுவரை சசிகலாவை தாக்கி பேசியது கிடையாது. சசிகலாமீது அவருக்கும் பயம் கலந்த மரியாதை உண்டு என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மட்டுமே சசிகலாவை தலைவியாக ஏற்க தொடர்ந்து மறுத்து வருகிறார்கள்.

இதை பயன்படுத்தி, அதிமுகவை மீண்டும் உடைக்க பாஜக முயற்சி செய்யலாம் என கூறப்படுகிறது. அதிமுகவின் வாக்குகளை பிரிக்கும் நோக்கில், மீண்டும் ஓபிஎஸ்-க்கு தூபம் போட்டு கட்சியை உடைத்தால், அதிமுகவுன் சின்னமான இரட்டை இலை முடக்கப்படும் வாய்ப்பும் உருவாகும். அதுபோன்ற சூழலை உருவாக்கவே பாஜக தலைமை முயற்சி செய்வதாகவும் தலைநகர தகவல்கள் தெரிவிக்கின்றன.

2021 சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது பாஜகவின் நோக்கம் அல்ல, ஆனால், தமிழகத்தில் பாஜக கால் பதிக்க வேண்டும் என்பதே முதன்மையான நோக்கமாக கொண்டுள்ளது.  அதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் எதிரொலியே ரஜினியின் அரசியல் கட்சியின் அறிவிப்பு என்று கூறும் அரசியல் நோக்கர்கள்,  இதுபோன்று ஒரு சம்பவம் நடைபெற்றால், பாஜக தலைமையில் 3வதுஅணி உருவாகி, சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் என கூறப்படுகிறது.

இந்த கூட்டணியில், பாஜகவுடன், ரஜினி மற்றும் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக, மேலும, சில ஜாதிய, மத கட்சிகளும் , சேர்த்து 3வது அணி அமைத்து களம் காணவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளையில் அதிமுக, அமமுக சசிகலா தலைமையில் தனிக்கூட்டணி உருவாகி தேர்தலை சந்திக்கும் சூழல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

ரஜினியின் அரசியல் அறிவிப்பை தொடர்ந்து, தமிழக அரசியலில் ஒருவித பரபரப்பு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. அதேவேளையில், ரஜினி அவ்வளவு ஈசியாக தேர்தல் களத்தை தாண்ட முடியாது என்பதையும் மறுக்க முடியாது. அவருக்கு எராளமான சவால்கள் காத்திருக்கின்றன.

ஆனால், அவர் தற்போது தமிழகத்தில் உள்ள அரசியல் சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் நோக்கிலேயே அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும், அவரது அறிவிப்பு அதிமுகவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

மேலும், உடல்நலத்தை கூறி மக்களை சந்திக்க பயப்படும் ரஜினி, மாபெரும் திராவிடக்கட்சிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதும் மில்லியன் டாலர் கேள்வி. அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டுள்ள மாபெரும் தலைகள் எல்லாம் திராவிடக்கட்சிகளும் உள்ள நிலையில், அவர்களின் அதிரடி பிரசாரத்தை ரஜினியால் எதிர்கொள்ள முடியுமா?

தன்னை எம்ஜிஆராக நினைத்து களமிறங்க உள்ள ரஜினி, எம்ஜிஆரைப் போல வெற்றிபெற முடியுமா? அவரது திரையுலக வாழ்க்கை வேறு, தனிமனித வாழ்க்கை வேறு. ஆனால், ரஜினியின் குடும்ப வாழ்க்கை, அவரது குடும்பத்தினரின் நடவடிக்கைகள் சந்தி சிரிக்கப்பட்டு வந்துள்ளன. இதுபோன்ற செயல்கள் எல்லாம் பிரசாரத்தின்போது, வெளிப்பட வாய்ப்பு ஏற்படும், ரஜினி மீதான மக்கள் நம்பிக்கையை தகர்தெரிய அரசியல் கட்சிகள் முற்படும் என்பதையும் மறுக்க முடியாது. அதிமுக,  திமுக கூட்டணியினர் ரஜினிக்கு எதிரான கருத்தை பரப்புவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.  அதை ரஜினியால் எதிர்கொள்ள முடியுமா என்பது போகப்போகத்தான் தெரியும்.

திமுகவில் ஸ்டாலின் வலிமை பொருந்திய தலைவராக உள்ளார். அதனால் அதை நெருங்க முடியாது. ஆனால், அதிமுகவில் வலிமையான தலைமை இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.  இதை பயன்படுத்தி,  ரஜினியின் அரசியல்  இருக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதிமுகவின் வாக்குகளை பிரிக்கவும், திமுகவுக்கு எதிரான மனநிலையை பெண்களிடமும், இளைஞர்களிடையேயும் உருவாக்கும் நோக்கிலேயே, ரஜினியின் அரசியல் பயணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், ரஜினி கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே அவருக்காக ஒரு கும்பலே காத்துகிடக்கிறது என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது. தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு உள்பட, தமிழருவி மணியன், அர்ஜுன் சம்பத், கராத்தே தியாகராஜன், செ.கு.தமிழரசன் உள்பட பல நலம் விரும்பிகள் உள்ளனர். அவர்கள்தான் ரஜினிக்கு அரசியல் ஆசை காட்டி வந்தவர்கள். இவர்களை மீறி ரஜினி எப்படி செயல்படப்போகிறார் என்பதும்  போகப்போகத்தான் தெரியும்.

ஆனால்,   ரஜினி அரசியலுக்கு லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்தாலும்  திமுகவையோ, திமுக வாக்கு வங்கியையோ பாதிக்காது என்றும் திமுக எம்.பி கனிமொழி தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே,  ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என  கூறியிருந்த கமல்ஹாசன் ரஜினியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதாக கூறியிருந்தார். அதற்கு பதில் தெரிவித்திருந்த ரஜினி, நானும், கமலும் இணைந்தால் யார் முதல்வர் என்பது குறித்து, தான்  கட்சி ஆரம்பிக்கும் போது, கட்சியினருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றவர், நான் கட்சி ஆரம்பிக்கும்போது  முடிவு சொல்கிறேன் என்று தெரிவித்திருந்ததும் இந்த நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

ரஜினி அரசியல் வருகை மற்றும் அவரது தனிக்கட்சி அறிவிப்பு என்பது அதிமுக பாஜக கூட்டணிக்கு கூடுதல் பலத்தை நிச்சயம் தரும். கூட்டணியை அமைத்தால் , அது வருக்கு பெரிய பலத்தை கொடுக்கும். மாறாக அவர் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்டால் ஓட்டுக்கள் பிரியும். அப்போதும் அது அதிமுக கூட்டணிக்கே சாதகமாக இருக்கும். எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

எம்ஜிஆர் போல ரஜினி சாதிப்பாரா? அல்லது சிவாஜியைப் போல புஷ்வானமாக போவாரா என்பதை 2021 சட்டமன்ற தேர்தல் தீர்மானிக்கும்.

சிறப்புக்கட்டுரை: ஏடிஎஸ். பாண்டியன்

ரஜினியின் அரசியல் அறிவிப்பு – தமிழக அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?