Random image

தேர்தலுக்கு தயாராகிறார் ரஜினி!

நியூஸ்பாண்ட்:

“வருவேனா இல்லையா.. ஆண்டவன் கையிலதான் இருக்கு” என்று தனது முப்பது வருட டயலாக்கைத்தான் சமீபத்திய ரசிகர் சந்திப்பிலும் பேசினார் ரஜினிகாந்த்.

“போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்” என்று அவர் பேசியது, தேர்தலைத்தான் குறிக்கிறது என்று அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.  அரசியல் தலைவர்கள் பலரும், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து சொல்ல ஆரம்பித்தனர்.

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர், ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என வெளிப்படையாக அறிவித்தனர். பா..ஜ.கவினர், தங்கள் கட்சியில் ரஜினி சேர வேண்டும் என அழைத்து வருகிறார்கள். மற்ற தலைவர்கள், பொதுவாக ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று வாழ்த்தி உள்ளனர்.

அதே நேரம், “முப்பது வருடமாக இதையேத்தான் ரஜினி சொல்லிவருகிறார். விரைவில் வெளிவர இருக்கும் அவரது 2.0 படத்தின் பிரமோஷனுக்காக இப்படி பேசுகிறார்” என்ற கருத்தும் நிலவி வருகிறது.

ஆனால், விரைவில் ரஜினி தனிக்கட்சி துவங்கும் முடிவில் இருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதியாக தெரிவிக்கின்றன.

அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் இதுதான்:

“பொதுவாக ரஜினிக்கு அரசியலில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற ஆர்வம் அக்கறை உண்டு. அதன் வெளிப்பாடாகத்தான்,  ரசிகர் சந்திப்புக்குப் பிறகும், தினமும் தனது  போயஸ் இல்லத்துக்கு வரும் ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார். வருகிறார்கள். ரஜினியும் சிலரை சந்தித்து பேசுகிறார்.

இதுவரை பலவித காரணங்களால் நேரடி அரசியலுக்கு வராமல் இருந்தார். ஆனால் தற்போது தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது.

தமிழக அரசு நிர்வாகம் கிட்டதட்ட முடங்கிப்போய்விட்டது. இதையெல்லாம் தனது ஐ.ஏ.ஸ். நண்பர்கள் மூலம் தொடர்ந்து அறிந்துவந்தார் ரஜினி.

இந்த நிலையில்தான் தீர்க்கமாக யோசித்து  தனிக்கட்சிக்கு வருவது என்ற முடிவை எடுத்துள்ளார்.

அதே நேரம், வீணாக அறிக்கை அரசியல் நடத்த அவர் விரும்பவில்லை. அதனால்தான் “போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்” என்றார். போர் என்று அவர் குறிப்பிட்டது தேர்தலைத்தான்.

ஆனால் மறைமுகமாக சில பணிகளை அவர் முடுக்கிவிட்டுள்ளார். தனது ரசிகர் மன்ற சந்திப்பு பேச்சு குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள், ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வரும் கருத்துக்களை உண்ணிப்பாக கவனித்து வருகிறார்.

இது குறித்த செய்திகள், பதிவுகளை தொகுத்து அளிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.  ரஜினிக்குச் சொந்தமான சென்னை ஈ.சி.ஆர். பங்களாவில் இந்த குழு சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. அன்றாடம் ரஜினி குறித்து வரும் செய்திகளை, “பாஸிடிவ், நெகட்டிவ்” என்று தனித்தனியாக ஃபைல் செய்து வருகிறார்கள். இதில் கவனிக்கத்தக்க விமர்சனங்களை உடனுக்குடன் ரஜினிக்கு அனுப்பி வருகிறார்கள்!

இன்னொரு புறம், தமிழகம் முழுதும் தனக்கு நம்பகமாக ஆட்களை அனுப்பி வைத்திருக்கிறார் ரஜினி. நான்கு குழுவாக சென்றுள்ள இவர்கள், தமிகத்தின் வடக்கு, மேற்கு மத்திய,  தெற்கு என பிரித்துக்கொண்டு அந்தந்த பகுதி மாவட்டங்களில் ரஜினி மன்றங்களின் நிலை, ஆக்டிவாக எத்தனை பேர் இருக்கிறார்கள், அந்தபகுதியில் உள்ள பிரச்சினைகள் என்ன, என்றெல்லாம் ஆராய்ந்து வருகிறார்கள்.

விரைவில் இவர்கள் தங்களது அறிக்கையை ரஜினியிடம் கொடுப்பார்களாம்.

முன்பெல்லாம் அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலரை, தனிப்பட்ட முறையில் சந்தித்து ரஜினி பேசுவது உண்டு. இந்த சந்திப்புகள் குறித்த செய்தி வெளியில் வராது.  ஆனால் சமீபகாலமாக  அந்த அரசியல் தலைவர்களை சந்திப்பதை ரஜினி தவிர்க்கிறார்.

ஏற்கெனவே குறிப்பிட்டது போல, தனக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மூவரை தொடர்புகொண்டு அவ்வப்போது முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.

2021ம் ஆண்டைய தமிழக சட்டமன்ற தேர்தல்தான் அவரது இலக்கு. ஆனால் அதன் முன்னோட்டமாக, வரும் உள்ளாட்சி தேர்தலில் தனது ரசிகர்கள் பலரை களம் இறக்க தயாராகி வருகிறார்.

அதாவது, அந்தந்த பகுதியில் வெற்றி வாய்ப்புள்ள ரஜினி ரசிகர்கள் தனிப்பட்ட முறையில் தேர்தல் களம் காண்பார்கள். ரஜினி வெளிப்படையாக அறிக்கவை வெளியிட மாட்டார். அதே நேரம், “ரஜினி ஆதரவு பெற்ற” என்ற வார்த்தைகளை அந்த வேட்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்திருக்கிறார்.

வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தனிக்கட்சி துவங்கும் எண்ணத்தில் இருக்கிறார்.

ஆக.. இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தலுக்கும்,  எதிர்வரும் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கும் தயாராகி வருகிறார் என்பது உறுதி” என்று உற்சாகத்துடன் சொல்கிறது ரஜினிக்கு நெருக்கமான வட்டாரம்.

பார்ப்போம், என்ன நடக்கிறது என்று!