ரஜினி ரிட்டர்ன்: அரசியல்வாதியாக வருகிறாரா… நடிகராக வருகிறாரா?

ஜினிகாந்த் தற்போது நடித்துவரும் படம், காலா. அவரது மருமகனும் நடிகருமான தனுஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த 28ம் தேதி மும்பையில் தொடங்கியது. இந்த முதல் ஷெட்யூல் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று ரஜினி சென்னை திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்வார்.

மும்பை தாராவி பகுதியில் வசிக்கும் தாதா வேடத்தில் நடிக்கிறார் ரஜினி. அதற்காக அங்கு தாராவி பகுதியில் படப்படிப்பு நடந்தது. அதன் தொடர்ச்சியான காட்சிகளை எடுக்க, சென்னையில் தாராவி போல செட் போடப்பட்டுள்ளது.

சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்த ரஜினி, அரசியல் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து, “இதுவரை நடந்துகொண்டது போல் இல்லாமல் இந்த முறை ரஜினி அரசியலுக்கு வந்தே தீருவார்” என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

தற்போது சில நாட்கள் ஓய்வில் இருக்கும் ரஜினி, அரசியல் குறித்து பேசுவாரா என்ற  கேள்வி எழுந்துள்ளது.

மும்பை படப்பிடிப்புக்கு கிளம்பிச் சென்ற ரஜினியிடம், சென்னை ஏர்போர்ட்டில் “இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதை தடுக்கும் மத்திய அரசின் உத்தரவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தற்போது நடிகனாக படப்பிடிப்பில் கலந்துகொள்ள செல்கிறேன். இப்போது அரசியல் கேள்விகள் வேண்டாம்” என்று ரஜினி தெரிவித்தார்.

ஆகவே, காலா படத்தின்  அடுத்த படப்பிடிப்பு சில நாட்களில் சென்னையில் துவங்க இருக்கிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் அரசியல்வாதியாக மாறி, ஏதேனும் பேசுவாரா.. அல்லது நடிகராகவே இருந்து கருத்து சொல்ல மறுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.