சென்னை:

பிரபல கதாசிரியரும், ரஜினியின் பைரவி படத்தின் தயாரிப்பாளருமான கலைஞானத்துக்கு வீடு வாங்கிக் கொடுத்து கவுரப்படுத்தி உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இது பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இதுகுறித்து கூறிய கலைஞரானம், வீடு வாங்கிக் கொடுத்தார்… விளக்கும் ஏற்றி வைத்தார் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ரஜினி நடித்த வெற்றிப் படமான பைரவி படத்தை தயாரித்தவரும், தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான கதாசிரியராக இருந்தவருமான கலைஞானத்திற்கு பாராட்டு விழா கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இதில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு அவரை வாழ்த்திய சமயத்தில், விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார், கலைஞானம் இன்னமும் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார். அவருக்கு தமிழக அரசு ஒரு வீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்குப் பதில் அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ கலைஞானத்திற்கு தமிழக அரசு வீடு வழங்கும் என தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய ரஜினி,  “ஸாரி… கலைஞானம் அவர்கள் இன்னமும் வாடகை வீட்டுலதான் இருக்கார்ங்கிறது எனக்கு இப்பத்தான் தெரியும். ‘நல்லாருக்கீங்களா?’னு கேட்டா… ‘நல்லா இருக்கேன்’ னு சொல்லுவார்.

வெள்ளை வேட்டி சட்டையில பளிச்சுனு சிரிச்சமுகமா இருக்கிற அவரைப் பார்க்கும் போது… அவர் கஷ்டபப்டுறமாதிரி தோணாது. அழுத குழந்தைக்குத்தான் தாய்கூட பால் கொடுப்பா. கலைஞானம் என்கிட்ட கேட்டிருக்கணும். பத்து படமாவது அவருக்கு நான் செய்துகொடுத்திருக்கணும்.

கலைஞானத்துக்கு வீடு கொடுக்கிற வாய்ப்பை நான் அரசாங்கத்துக்கு தரமாட்டேன்…  நான் வாங்கித்தருவேன். கலைஞானத்தோட கடைசி மூச்சு… நான் வாங்கித்தர்ற வீட்டுலதான் போகணும். இன்னும் பல்லாண்டு காலம் கலைஞானம் நலமுடன் வாழணும்” என்றார் ரஜினி.

அதையடுத்து, கலைஞானத்துக்கு வீடு வாங்கிக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட ரஜினி, தனது உதவியாளர்களை முடுக்கி விட்டார். விருகம்பாக்கம் பகுதியில், அமுதினி ஃபிளாட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் 1320 சதுரடியில் மூன்று படுக்கையறைகளும், இரண்டு கார் பாக்கிங்களும் கொண்ட வீடு வாங்கி, கலைஞானத்தின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வீட்டின் கிரஹப்பிரவேசம் நேற்று (7.10.2019)  நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.  காலை பத்துமணிக்கு தான் வாங்கிக்கொடுத்த புதுவீட்டுக்கு ரஜினி வந்தார். அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் கலைஞானம்.

பூஜையறையில் குத்துவிளக்கேற்றினார் ரஜினி. கூடவே பாபா படம் ஒன்றையும் பரிசளித்தார். அதன்ப்பின் ரஜினிக்கு மில்க் ஸ்வீட் தரப்பட்டது.  அதைச் சாப்பிட்டபின் கலைஞானம் தன் குடும்பத்தினரை ரஜினிக்கு அறிமுகம் செய்துவைத்தார். பிறகு வீட்டைச் சுற்றிப்பார்த்த ரஜினி… “வீடு தெய்வீகமா இருக்கு” என மகிழ்ச்சி தெரிவித்துவிற்று விடைபெற்றுச் சென்றார் ரஜினி.

இதுகுறித்து கூறிய கலைஞானம், “வீடு வாங்கிக்கொடுத்தார்… விளக்கும் ஏற்றிவைத்தார்” என்று நெகிழ்ச்சியாக கூறினார்.